வாழ்வியல்

நீரில் பயணிக்கும் சைக்கிள் படகு : பாலபட்டு கிராமத்திற்கு நீர் கிடைக்க உதித்த புதிய யோசனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்கு உட்பட்டது பாலபட்டு கிராமம், இங்கே உள்ள பெரிய ஏரியின் மையப்பகுதியில் உள்ள மின்விசை மோட்டார் இயந்திரத்தை இயக்குவதற்காக நீரில் பயணம் செல்லும் சைக்கிள் படகு ஒன்றை குடிநீர் பணியாளரின் நலன் கருதி வடிவமைத்திருக்கிறார் பாலப்பட்டு ஊராட்சி செயலர் பாலமுருகன்.

பாலப்பட்டு கிராமத்தில் 542 குடும்பங்கள் என மொத்தம் 3167 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கிராமத்தில் உள்ள ஐந்து நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக தான் நீரானது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிகள் மொத்தமாக 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

மேலும் நீர்த்தேக்க தொட்டிகள் அனைத்திற்கும் பாலப்பட்டு கிராமத்தின் பெரிய ஏரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிணற்றில் இருந்து தான் நீரானது நிரப்பட்டு வருகிறது. அந்த கிணற்றில் இருந்து நீரை, நீர் தேக்க தொட்டிகளுக்கு செலுத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஏரியின் மையப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே இருக்கும் அறைக்குச் சென்று மின்விசை மோட்டார் இயந்திரதை இயக்கி வருகின்றனர். வெயில் காலங்களில் ஏரி வற்றி இருக்கும் என்பதால் சுலபமாக நடந்து சென்று மின்விசை மோட்டார் இயக்கப்படும்,

ஆனால் மழைக் காலங்களில் ஏரி முழுவதும் நிரம்பி இருக்கும் என்பதால் மின்விசை மோட்டார் இயக்குபவர் லாரி டயர் டியூபை மாட்டிக்கொண்டு 25அடிகளுக்கு மேல் ஆழம் உள்ள ஏரியில், 300மீட்டர் தூரம் மிதந்து சென்று தான் மின்விசை மோட்டாரை இயக்கிய பிறகு மறுபடியம் கரைக்கு மிதந்து வரும் சூழல் நிலவி வந்தது.

இவ்வாறு மோட்டரை இயக்குவதற்காக நீரில் பயணம் செய்யும் போது சில நாட்கள் ஏரியில் உள்ள முற்களால் டயர் டியூப் பஞ்சர் ஆகிவிடும் இதனால் மோட்டார் இயக்குபவர் பாதியிலே நீச்சல் தெரிந்த காரணத்தால் நீந்திக் கரை வந்துவிடுவார்.

இவ்வாறு மின்விசை மோட்டார் இயக்குவதற்காக ஏரியைக் கடந்து சென்று வந்த மோட்டார் இயக்குபவரின் பாதுகாப்பு நலன் கருதி பாலப்பட்டு ஊராட்சி செயலர் பாலமுருகன் தனது சொந்த முயற்சியில் சைக்கிள் வடிவிலான படகு ஒன்றை ஏரியில் பாதுகாக்க பயணம் செல்லும் விதமாக 13,600 ரூபாய் செலவில் தயார் செய்தார்.

இந்த சைக்கிள் விசைப்படகு நீரின் மேல் மிதப்பதற்கு ஏதுவாக பிவிசி பைப்புகள் பயன்படுத்தப்பட்டு, இதை இயக்குபவர் ஏற்ற திசையில் வளைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படகு முன்னும் பின்னும் நகர்வதற்கு ஏற்றாற்போல் பின்புறம் துடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்க தொட்டிகளை நிரப்புவதற்காக சைக்கிள் படகு மூலம் ஏரியில் சுலபமாக பயணம் செய்து மின்விசை மோட்டாரை இயக்கி வருகிறார் குடிநீர் பணியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *