செய்திகள்

நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் உள்பட 5 பேர் குற்றவாளிகள்

புதுடெல்லி,நவ.30–

மேற்கு வங்காளம் மாநிலத்தில் தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த வழக்கில் முன்னாள் செயலாளர் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. கோர்ட் அறிவித்தது.

மேற்கு வங்க மாநிலத்தின் மோய்ரா மற்றும் மதுஜோரே ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை விகாஸ் மெட்டல் அன்ட் பவர் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. முறைகேடாக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில், குற்றச்சதி நடந்துள்ளதை இன்று உறுதிப்படுத்திய சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பாரத் பராஷார், முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் ஹெச்.சி.குப்தா, விகாஸ் மெட்டல் அன்ட் பவர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விகாஸ் பாட்னி, அதே நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் மாலிக், ஓய்வுபெற்ற நிலக்கரித்துறை அதிகாரி கே.சி.சம்ரியா மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோப்பா ஆகியோரை இன்று குற்றவாளிகளாக அறிவித்துள்ளார்.

இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக டிசம்பர் மூன்றாம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ள நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் இன்று சிறையில் அடைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *