செய்திகள்

நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் திடீர் சந்திப்பு

புதுடெல்லி, ஆக. 5–

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லியில் சந்தித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த திங்கட்கிழமை விலைவாசி உயர்வு குறித்து லோக்சபாவில் விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்பி கனிமொழி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். ஜிஎஸ்டி வரி விதிப்பு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி கனிமொழி மற்றும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதில் அளித்தார். மேலும், ‛‛திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக கூறிய நிலையில் அதனை செய்யவில்லை. ஆனால் கடந்த 6 மாதத்தில் மத்திய அரசு 2 முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மேலும் ஜிஎஸ்டியை காரணம் காட்டி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக கூறினார். மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. இதில் தமிழக நிதி அமைச்சரும் உள்ளார்” என்றார்.

இதற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், மத்திய நிதியமைச்சர் கூறியது கால்வாசி உண்மை. கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு பலமுறை வரி உயர்த்தியது. இதனால் மத்திய அரசின் வரிவருவாய் பல லட்சம் கோடி உயர்ந்தாலும் தற்போதைய விலை குறைப்பு என்பது போதாத நிலையில் தான் உள்ளது என சாடினார். மேலும் ஜிஎஸ்டி தொடர்பாகவும் அவர் பதிலளித்து இருந்தார்.

திடீர் சந்திப்பு

இந்நிலையில் தான் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீரென்று இன்று டெல்லி சென்றார். டெல்லியில் அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடந்த ஜூன் மாத இறுதியில் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்துக்கு நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

இதையடுத்து ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மதுரையில் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தமிழக அரசு சார்பில் பழனிவேல் தியாகராஜன் வைத்த கோரிக்கையை ஏற்று இதனை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர், 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் உள்ளிட்டவற்றால் ஜிஎஸ்டி கூட்டம் தள்ளிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் நடத்திவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தான் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.