ஆர். முத்துக்குமார்
வயநாடு மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால், மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருப்பது அரசியல் களத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
2019–ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, மோசடி வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற தொழிலதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
சூரத் நீதிமன்றத்தால் அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா செயலகம் வெளியிட்ட நோட்டீஸில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நாளான மார்ச் 23 முதல் அவர் சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி இப்போது உயர் நீதிமன்றத்தை அணுகி தனது தண்டனையை நிறுத்தி வைக்க கோர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில், ‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் ஏன் இருக்கிறது?’ என்று கூறியதற்காக ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 500, அவதூறுக்கு “இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு எளிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து” பரிந்துரைக்கிறது.
ரூபாய் 15,000 ஜாமீனில் காந்தியின் ஜாமீனுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதோடு மேல்முறையீடு செய்ய அனுமதிக்க 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தியும் வைத்தது.
ஒரு உயர் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதித்தால் அல்லது தண்டனை பெற்ற சட்டமியற்றுபவர்க்கு ஆதரவாக மேல்முறையீட்டை முடிவு செய்தால் தகுதியிழப்பு மாற்றப்படலாம்.அரசியல் சட்டப்பிரிவு 102(1) மற்றும் 191(1)இன் படி, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர், லாபம் தரும் பதவியில் இருந்தாலோ, மனநலம் குன்றியவராக இருந்தாலோ, திவாலாக இருந்தாலோ அல்லது சட்டப்பூர்வ இந்தியக் குடிமகன் அல்லாதவராக இருந்தாலோ தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
தகுதி நீக்கத்தின் இரண்டாவது விதி அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையில் உள்ளது. கட்சி மாறுவதன் அடிப்படையில் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான விதிகள் இதில் உள்ளன.
இது தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951ன் கீழ், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தனது உறுப்பினர் பதவியை இழக்கலாம். இந்த சட்டத்தின் மூலம் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) இன் கீழ், ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மக்களவை அல்லது சட்டமன்ற உறுப்பினராகத் தொடரும் தகுதியை இழக்கிறார்.
எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் பதவியை மீண்டும் திரும்பப் பெறுவது போன்றவற்றில் இறுதி முடிவு அவைத் தலைவர் வசமே இருக்கிறது.
அரசியலில் தெருமுனை பிரச்சார கூட்டங்களில் அனல் பறக்கும் பிரச்சார உரைகளுக்கு பஞ்சம் இருக்காது!
எவ்வளவு உயர்ந்த ஆற்றல்கள் நிறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அடக்கத்தோடு இருந்தால்தான் பெருமை.அடக்கமுடைமை என்ற உயர்ந்த குணத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் வள்ளுவப் பெருந்தகை அந்தத் தலைப்பிலேயே ஒரு தனி அதிகாரம் படைத்திருக்கிறார்.
அதில், அடக்கம் என்ற உயர் பண்பு ஒருவரை வானளவு உயர்த்தும். தேவர்களில் ஒருவராகவே கூட மாற்றும். ஆனால் அடங்காமை என்ற குணக்கேடு இருக்கிறதே, அது அவனை இருளில் தள்ளி விடும் என்று சுட்டிக் காட்டுகிறது.
வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி – கிண்டல் செய்தல், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், பட்டப் பெயர் சொல்லுதல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களால் ஏற்படும் கஷ்ட நஷ்டத்தைப் புரிய வைக்கிறது இந்த கசப்பான நிகழ்வு.
அரசியலில் இது சகஜம் என்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு வரமா? சாபமா? என்பதை காலம்தான் நமக்கு தெரியபடுத்தும், முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்படும் முதல் படி என்று பார்ப்போம்!