செய்திகள்

நாளை முழு ஊரடங்கு: மெட்ரோ ரெயில்` ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கம்

சென்னை, ஏப். 24–

நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும், மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று படுவேகமாக பரவி வருவதையடுத்து, வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவைகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் மாற்றம் செய்யப்பட்டது. இதை போல் வரும் ஞாயிற்றுக்கிழமையும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும், மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பயணம் செய்ய வேண்டும். மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முழு பொது முடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை (நாளை) சென்னை புறநகர் மின்சார சேவையை பொது மக்கள் யாரும் பயன்படுத்த முடியாது. அன்றைய தினம் மின்சார ரயில் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில் சேவை இல்லாவிட்டாலும், சென்னையின் பல்வேறு முக்கியப் பகுதிகளை இணைக்கக் கூடிய மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயில் சேவையின் மூலமாக, ரயில் மற்றும் விமான நிலையங்களுக்குச் செல்வோர் தங்களது பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். முழு பொது முடக்கத்தால் ரயில், விமானங்கள் மூலமாகச் செல்வோர் எந்தத் தடையும் இல்லாமல் வெளியூர்களுக்குச் செல்ல மெட்ரோ ரயில் சேவை வழிவகுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *