நாடும் நடப்பும்

நாளை பதவி ஏற்பு! நேற்றே அரச கட்டளை!!நல்லாட்சி துவக்கம் : இது ஸ்டாலின் ஸ்டைல்

நாளை தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்படிப்பட்ட ஆட்சியை தரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தமிழகமெங்கும் இருக்கிறது. அமைச்சர்கள் யார் யார்? மூத்த அதிகாரிகள் யாருக்கு பொறுப்பு மிகுந்த பதவிகள்? போன்ற கேள்விகளுக்கு விடை தரும் முன் அவர் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய சோதனை – இந்த கொரோனா பெரும் தொற்று பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை எப்படிக் காப்பாற்றுவது? என்பதுதான்.

பதவி ஏற்க வரும் முன் இருக்கும் பட்டாபிஷேக கோலாகலத்தை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது! ஆனால் தற்போதையை நிதர்சனத்தை உணர்ந்து முதல்வர் பதவி ஏற்பு வைபவத்தை மிகச்சிறியதாக நடத்திட உத்தரவிட்டிருப்பது ஸ்டாலினின் இன்றைய மனநிலை புரிகிறது.

ஜெயித்து விட்டோம் என்ற மமதையோ அகங்காரமோ தெரியவில்லை. தமிழகத்தின் நலன் மீதும் தன் கட்சி உடன்பிறப்புகள் மீதும் உள்ள அக்கறையும் வெளிப்படுகிறது.

அது மட்டுமா? உடனடியாக War Room அதாவது போர்க்கால அடிப்படையில் இயங்கவும் தனக்கு ஆலோசனைகள் தரவும் ஓரு கட்டுப்பாட்டு அறையையும் நிறுவியுள்ளார்.

வெளியேறும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாட்டு அறை மிக அருமையாகவே செயல்பட்டு வந்தது. பாதிக்கப்பட்டவர் இல்லங்களில் தேவையானவற்றை கொண்டுச் சேர்ப்பது என்பன கூட இந்த மையம் கண்காணித்து செயல்படுத்தியதை தமிழகம் பார்த்து வந்தது.

ஆனால் தொடர்ந்து 15 மாதங்களுக்கும் மேலாக இப்படி கொரோனா பெரும் தொற்று ஏற்படுத்தி வரும் சர்வ நாசத்தில் பல்வேறு புதுப்புது குழப்பங்கள் எழ ஆரம்பித்து வருகிறது.

மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவர் தட்டுப்பாடு, விடியவிடிய சேவை செய்யும் முன்களப் பணியாளர்களுக்கு இயற்கையாக வந்து கொண்டிருக்கும் சோர்வுகள்… இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேற்றைய தினம் தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிப்பு நெரிசலால் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு எப்படிப்பட்ட பின்னடைவை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு அபாய எச்சரிக்கை போல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சம்பவம் ஏற்பட்டும் இருக்கிறது.

அன்றாடம் சாமானியன் குறிப்பிட்ட ஊசி மருந்து கிடைக்காது திண்டாடுவது மருத்துவமனைகளில் இடம் காலியில்லை என்ற அறிவிப்பு பலகை, தனியார் மருத்துவமனைகளில் இரட்டிப்பாகிவிட்ட கட்டணங்கள் என பல்வேறு சிக்கல்கள் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்.

இந்நிலையில் தான் ஸ்டாலின் ‘மருத்துவ அவசர நிலை’ என்று இந்நோயின் தீவிரத்தை அறிவித்து அவசர முடிவுகளை பிறப்பித்து ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் முன்பே செயல்பட துவங்கி விட்டார்.

ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை ஆகியவற்றை அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்த இடத்தில் இருப்பு உள்ளது – எந்த இடத்துக்கு அதிகமாகத் தேவை என்ற இரண்டு தகவல்களையும் ஒருங்கிணைக்கும் மையமாக இது இருக்கும். குறிப்பாக, ஆக்சிஜன் இருப்பு தகவல்கள்தான் இதில் முக்கியமானதாக இருக்கும். இந்தத் தகவல்கள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறேன். மாவட்ட அளவிலும் மாநில அளவிலுமான மையமாக இவை இருந்து செயல்படும். போர்க்காலத்தில் செயல்படுவதைப் போல நம்முடைய மருத்துவர்கள் செயல்பட்டு மக்கள் சேவையாற்றுவார்கள்.

கொரோனா பரவல் அதிகமாவதும், ஆக்சிஜன் தேவை கூடுதலாக ஆகிக்கொண்டு போவதுமான சூழலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளோடு சேர்ந்து தனியார் மருத்துவமனைகளும் துரிதமாகச் செயல்பட்டாக வேண்டும்”.

நாளைய தினம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பு விழா : நேற்றே அரசு கட்டளைகள்! சபாஷ்! ஸ்டாலின் உங்கள் வேகம் பாராட்டுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *