செய்திகள்

நாளை தொடங்கும் 2 நாள் ஜி–7 உச்சி மாநாடு: பிரதமர் பங்கேற்பு

டெல்லி, ஜூன் 11–

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று, ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நாளை கலந்து கொள்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெறும், 47ஆவது ஜி7 உச்சி மாநாட்டில் ஜூன் 12, 13 ஆம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். ஜி7 மாநாட்டுக்கு தற்போது தலைமையேற்றுள்ள இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கொரிய குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை விருந்தினர்களாக அழைத்துள்ளது.

இந்த உச்சி மாநாட்டின் மையப்பொருள், ‘சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம்’ என்பதுதான். அதன்படி, கொரோனாவில் இருந்து சர்வதேச அளவில் மீண்டு, எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிரான உறுதியை வலுப்படுத்துதல், சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு ஆதரவளித்து எதிர்கால வளத்தை ஊக்கப்படுத்துதல், பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு பூமியின் பல்லுயிராக்கத்தை காத்தல், திறந்தவெளி சமூகங்களை ஊக்குவித்தல் ஆகிய முன்னுரிமைகளை உச்சி மாநாட்டிற்காக இங்கிலாந்து வகுத்துள்ளது.

பெருந்தொற்றில் இருந்து உலகம் விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை உச்சி மாநாட்டின் போது தலைவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி7 கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இரண்டாவது முறையாகும். பிரான்ஸ் தலைமையில் 2019ல் நடைபெற்ற பியாரிட்ஸ் உச்சி மாநாட்டில் ‘நல்லெண்ண பங்குதாரராக’ பங்கேற்ற பிரதமர் மோடி, ‘பருவநிலை, ‘டிஜிட்டல் மாற்றம்’ ஆகிய அமர்வுகளில் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *