நாடும் நடப்பும்

நாளை உபெகிஸ்தானில் 22–வது எஸ்சிஓ மாநாடு துவங்குகிறது

உலக ஒற்றுமை, பொருளாதார மேன்மை: மோடி, ஜின்பிங், புதின் கூட்டாக எடுக்க இருக்கும் முடிவுகள், உலக தலைவர்கள் எதிர்பார்ப்பு


நாடும் நடப்பும்


உலக ஜனத்தொகையில் 50 சதவிகிதம் கொண்டு 8 நாடுகளின் கூட்டமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 22–வது உச்சி மாநாடு செப்டம்பர் 15, 16 அன்று உஸ்பெகிஸ்தானில் நடக்க இருக்கிறது. அதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் நமது பிரதமர் மோடி நேரில் பங்கேற்க இருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐ.நா. சபைக்கு அடுத்த பெரிய அமைப்பு எஸ்சிஓ ஆகும்.

இந்த அமைப்பில் முதலில் 6 நாடுகள் உறுப்பினராக இருந்தன. பின்னர் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் 2017-ம் ஆண்டு இணைந்தன. ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீத நிலப்பரப்பு மற்றும் உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 40 சதவீத மக்கள்தொகை இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது யூரேசியாவின் (ஐரோப்பா-ஆசியநாடுகள்) அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும். இந்த பிராந்தியம் பூகோள ரீதியிலும் மக்கள் தொகை அடிப்படையிலும் உலகின் மிகப் பெரிய பிராந்தியமாகும்.

சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு நாடு இந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும். இவ்வாறு தலைமை வகிக்கும் நாடு, ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும்.

அந்த வகையில் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக நேரடியாக இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு முன் 2019-ல் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நேரடி மாநாடு நடைபெற்றது.

இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில், உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், அமைப்பின் பொதுச் செயலர்கள், எஸ்சிஓ மண்டல தீவிரவாத தடுப்பு கட்டமைப்பின் செயல்இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள்.

மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர்இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 15 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ அமைப்பின் கடந்த 20 ஆண்டுகால நடவடிக்கைகள் இந்த மாநாட்டில் மறுஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்தும் பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர்நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடன் தனியாக சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சமீபகாலமாக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை, பிரதமர் மோடி சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதேநேரம் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக முகாமிட்டிருந்த இந்திய, சீன படைகளை விலக்கிக் கொள்வது என சமீபத்தில் நடைபெற்ற இருதரப்பு ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இரு நாடுகளின் படைகளும் பின்வாங்கி வருவதால், இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

இந்த உச்சி மாநாடு முடிந்ததும் எஸ்சிஓ அமைப்பின் ஓராண்டுக்கான தலைமைப் பொறுப்பை சுழற்சி அடிப்படையில் இந்தியா ஏற்க உள்ளது. இதன்படி அடுத்த ஆண்டின் உச்சி மாநாடுடெல்லியில் நடைபெறும். இதில் உறுப்புநாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்பர்.

எஸ்சிஓ அமைப்பில் உறுப்பினராக 8 நாடுகளும் பார்வையாளராக ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடுகளும் உள்ளன. மேலும், இந்த அமைப்பில் இணைவது குறித்துஅர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை, துருக்கி ஆகிய 6 நாடுகள்பேச்சுவார்த்தை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ, ரஷ்யா, சீன அதிபர்கள் பிரதமர் மோடியுடன் மனம் விட்டு பேச இது ஓர் நல்ல சந்தர்ப்பம், அதன் பயனாக இந்திய பொருளாதார வளர்ச்சிகளுக்கு புது உந்துதல் பெறும் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் ரஷ்யாவின் நண்பன் என்ற முறையில் மோடி உலக அமைதிக்கு உத்திரவாதம் கொடுங்கள் என்று புதினை கேட்டுக்கொண்டு போர் பதட்டத்தை தணிக்கும் ஏதேனும் அறிவிப்பை வெளியிட்டால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சை விட்டபடி இந்தியாவின் நடுநிலை அரசியலை பாராட்டுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.