நாடும் நடப்பும்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் நாம் வாக்களிப்பு முறைகளில் பின்தங்கியே இருக்கிறோம். சிறிய நாடுகளான பிரான்சு, ஆஸ்திரேலியா மற்றும் உலகின் மிக பழமையான ஜனநாயக நாடாக இருக்கும் அமெரிக்காவில் எங்கு இருந்தாலும் வாக்களிக்கும் முறை வந்துவிட்டது.
2023–ல் நமது நாட்டில் பல அதிசய சமாச்சாரங்கள் நடைபெற இருக்கிறது. அதில் விண்ணுக்கு மனிதனை அனுப்பி மீண்டும் பத்திரமாக பூமிக்கு இவ்வாண்டு இறுதிக்குள் அழைத்து வர இஸ்ரோ ஆயுத்தமாக வருகிறது.
மேலும் 5 ஜி சேவை துவங்கி விட்ட நிலையில் இந்திய வாக்காளர்கள் உலகில் எங்கு இருந்தாலும் வாக்களிக்க வாக்கு சேகரிப்பும் அதிவகே நவீனமாக உயரத் தயாராகி விட்டது.
நம் நாட்டில் 90 கோடி பேர் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நடைபெற இருக்கும் பொது தேர்தலில் வாக்களிப்பதால் கடும் போட்டி நிகழ இருக்கிறது.
இம்முறையும் மின்னணு ஓட்டுப்பதிவு கருவிகளே உபயோகிக்க கட்டாயம் இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் மின்னணு வாக்குப்பதிவில் தில்லுமுல்லு, அதனால் தான் நாங்கள் தோற்றோம் என்று தோற்றவர்களின் கூற்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
ஆனால் மின்னணு வாக்குப்பதிவு முறை இனி வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் திரும்பிச் செல்ல வழியேயில்லை!
வாக்கு சீட்டை அச்சடித்து, அதை பத்திரமாக வைத்து பல நாட்களுக்கு எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்கும் வரை காத்திருக்க இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமே இல்லை!
மின்னணு வாக்குப்பதிவு, ஏற்படுத்தும் சந்தேகங்களை எப்படி சீர் செய்வது? என்ற கேள்வியுடன் நவீன 5ஜி தொழில் நுட்பத்தையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்து நிலையை சரி செய்வது தான் புத்திசாலித்தனம்!
நம் குடும்பங்களில் ஒருவராவது வேறு பகுதிக்கு வேலை நிமித்தமாக சென்று இருப்பார்கள். அவர்கள் தேர்தல் நாளில் ஊருக்கு வந்து வாக்களிக்க முடிவதில்லை. அது ஒரு சிறு சதவிகிதமாகத் தான் இருக்கும்.
அதையெல்லாம் விட வாக்களிக்கும் தினத்தன்று விடுமுறை என்பதால் குடும்பமாக விடுமுறையை ஓய்வாக ரசிக்க ரம்மியமான சுற்றுலா பயணத்திற்கு சென்றும் விடுவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தான் 2019 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு 67.4 சதவிகிதமாக மட்டும் இருந்தது.
இன்று பல லட்சம் ரூபாயை கூட ஓ.டி.பி. முறையில் அடையாளம் சரிபார்க்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடப்பது போல் மொபைல் போனில் இருந்தோ, கணினியில் இருந்தோ, முக்கிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ‘ஆன்லைன் வாக்களிப்பு’ மையங்களில் இருந்து வாக்களிக்க வசதியை கொண்டு வர வேண்டும்.
வெளிநாடுகளில் இருக்கும் நம் குடும்பத்தார் அங்கிருந்தே ‘ரிமோட்’ வாக்குப்பதிவு செய்ய வைத்தால் வரும் தேர்தல்களில் 80 சதவிகிதமாவது வாக்குப்பதிவு உறுதியாகும்.
இது விரைவில் வரும் சாத்தியக்கூறுகள் உருவாகி வருகிறது. இந்திய தேர்தல் வாரியம் தற்சமயம் 72 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நம் தேசத்தில் எந்த ஊரில் இருந்தாலும் ஆம், பிற மாநிலத்தில் இருந்தாலும் கூட சொந்த ஊரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டிய சாப்ட்வேர்கள் தயாராக இருக்கிறது, அவை தப்பு தவறுகள் ஏதுமின்றி செயல்படுகிறதா? என்றும் சோதனைகள் நடைபெற்று, அதில் வெற்றியும் பெற்று விட்டது.
தற்சமயம் அவை மாதிரிகள் தான், இந்த முன்மாதிரி திட்டம் 2024 தேர்தலில் அறிமுகமானால் பின்னர் மேலும் வளர்ச்சிகள் கண்டு நம் நாட்டில் 100 சதவிகித வாக்களிப்பு என்ற உன்னதமான செய்தியால் உலக பாராட்டை பெறப்போகும் நாள் வந்துவிடும் என்று நம்பலாம்.