சென்னை, டிச. 13–
நான் சொன்னால் ஓட்டே போடுவதில்லை, ரம்மி விளையாட சொன்னால் மட்டும் மக்கள் கேட்டு விடுவார்களா என்று சரத்குமார் கேள்வி எழுப்பினார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக எழுந்து வருகின்றன. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனிடையே, ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் நடிப்பது தொடர்பான சர்ச்சையும் நிலவி வருகிறது. இது தொடர்பாக வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை தற்கொலைக்கு தள்ளும் ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றுக்கு ஆதரவாக இருக்க கூடாது என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆன்லைனில் உலகம்
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் சரத்குமாரிடம், இது குறித்து இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆன்லைனில்தான் உலகமே இயங்கி கொண்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். ஆபாச படமும்தான் ஆன்லைனில் வருகிறது. அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதை ஏன் தடை செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
ஆன்லைன் ரம்மி தவறு என்றால் அரசு தடை செய்ய வேண்டும். தனிநபரான சரத்குமாரை நடிக்காதே என்று சொல்லுவதில் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்த அவர், “எந்த விஷயமாக இருந்தாலும் வேண்டாம் என்று நினைத்தால், அதை யாரும் செய்ய மாட்டார்கள். ஓட்டு போடுங்கள் என்று மக்களிடம் கேட்கிறேன். ஆனால், மக்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா? இல்லையே” என்றும் தெரிவித்தார்.
மேலும், “ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு. அதை விளையாட திறமை அவசியம். அவரச சட்டம் வருவதற்கு முன்பு நான் விளம்பரத்தில் நடித்திருந்தேன். அவசர சட்டம் முதலில் கொண்டு வந்திருந்தால் விளம்பரத்தில் நடித்திருக்க மாட்டேன்” என்றும் சரத்குமார் விளக்கமளித்தார். ஆனால், அவருடைய இந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.