செய்திகள்

நாடு முழுவதும் நிலுவையில் 4 கோடியே 70 லட்சம் வழக்குகள்

இந்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி, மார்ச் 26–

உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒலி, ஒளி பரப்புவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரலை செய்வது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மின்னணு கமிட்டி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர உச்ச நீதிமன்ற மின்னணு கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, நேரலை ஒளிபரப்புக்கான மாதிரி விதிமுறைகளை வகுப்பதற்கான துணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் தெரிவிக்கும் விதிமுறைகள், உயர் நீதிமன்றங்களின் கணினி குழுக்களுக்கு அனுப்பப்பட்டு கருத்துக் கேட்கப்படும்.

முதற்கட்டமாகத் தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் 3 மாதங்களுக்குச் சோதனை அடிப்படையில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு பின்னர், கட்டமைப்பு வசதிகளுக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.

நிலுவையில் 4.70 கோடி வழக்கு

குஜராத், ஒரிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பாட்னா மற்றும் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றங்கள், காணொலி வாயிலாக நடைபெறும் விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதன் மூலம், ஊடகங்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களும் இதில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று நாடு முழுவதும், 4.70 கோடி வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும் இதில் உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 70,154 வழக்குகள், 25 உயர் நீதிமன்றங்களில் 58,94,060 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப, 2018 ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்மூலம் நீதிமன்றத்தில் நடந்தவை பற்றி மக்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம் என்றும் சட்டம் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.