நாடும் நடப்பும்

நாடாள புறப்படும் ‘டிராக்டர்’ ராணி மல்லிகா சீனிவாசன்

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை உயர்த்த உறுதியாக இருக்கிறோம் என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசி இருந்தார் அல்லவா? அதை அமுல்படுத்த துவங்கி விட்டார்!

மல்லிகா சீனிவாசன்

பாராளுமன்றத்தில் தனியார் வசம் எல்லா பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்த்து தருவதாக புகார் எழுப்பி இது தவறு என்று எதிர்க்கட்சிகள் அமளி துமளி ஏற்படுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி தந்த போது அதற்கு பதிலடி தருவது போல், பேசும் போது பிரதமர் மோடி தந்த உறுதி, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களை விட சிறப்பாக இயங்க செய்வேன்.

அப்படி இயங்க வைத்து விட்டால் அரசு நிறுவனமாக தொடர்வதில் எந்த மாற்றுக்கருத்தும் எழாது என்று தெரிவித்து இருந்தார்.

விமான சர்வீஸ், தபால் தந்தி இலாகா உட்பட பல்வேறு பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் நடத்திக் கொண்டு இருப்பதால் பொருளாதாரம் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து வருவது தெரிந்ததே.

ஆனால் அதற்காக அவற்றை தனியார் வசம் ஒப்படைத்து விட்டால் அரசின் பங்கு குறைந்து விடும். குறிப்பாக புதிய நிதிச்சுமை ஏதும் இருக்காது தான்.

ஆனால் இதுவரை பல லட்சம் கோடிகளை சமூக அக்கறையுடன் முதலீடு செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட இதுபோன்ற பொதுத்துறை நிறுவனங்கள் நமது சொத்துக்கள் ஆகும்.

அடிபட்டு வலியில் தவிக்கும் கால், கையை வெட்டி விடுவது கிடையாது அல்லவா? அதுபோன்று தான் பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தாக வேண்டும். ஆகவே எதிர்க்கட்சியின் குரல் சரிதான். ஆனால் அதை ஏற்றால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் சறுக்கலை சந்தித்து படுபாதாளத்தில் விழுந்து மூழ்கி விடும் அபாயம் உண்டு.

இதற்கு என்ன தான் தீர்வு? இதை எதிர்கொள்ளவே பிரதமர் மோடி புதுத் திட்டத்தை அமுல்படுத்தி உள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை வழி நடத்தி வருவது அறிவார்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகும். ஆனால் அவர்களுக்கு நடைமுறை நிர்வாகவியல் அனுபவம் கிடையாது அல்லவா? அரசு தரப்பு உத்தரவுகளையும் விதிமுறைகளையும் உணர்ந்து நடத்தும் வல்லவர்களாக இருந்தும் நடைமுறை வர்த்தக முடிவுகளை ‘கார்ப்பரேட்’ அனுபவசாலிகளை போல் எடுக்க முடியாது. அதில் அவர்களுக்கு எந்த முன் அனுபவமும் கிடையாது அல்லவா?

ஆகவே நாட்டில் நிலவும் சட்ட திட்டத்தில் மிகப்பெரிய புரட்சிகர மாற்றமாய் பொது நிறுவனத் தேர்வு வாரியத்தின் தலைமை பொறுப்பில் எப்போதும் போல் மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கும் வழக்கத்தை மாற்றி தனியார் துறையில் சிறப்பாக பணியாற்றும் நிபுணரை நியமித்துள்ளார்.

அதாவது தனியார் வசம் தருவதால் கிடைக்கக்கூடிய பயனை தனியார் நிபுணரின் வரவால் பொதுத்துறை பயன் அடைய சாமர்த்தியமான முடிவு எடுத்துள்ளார் பிரதமர் மோடி.

‘டிராக்டர்’ ராணி என்று கருதப்படும் தமிழகத்தின் முன்னணி பெண் தொழிலதிபர் ‘டாபே’ நிறுவன சேர்மன் மல்லிகா சீனிவாசனை இந்த உச்சப் பதவியில் அமர்த்தி இருக்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் பெண் ஐஏஎஸ் வருவதில்லை. தொழில்சார் முன்னறிவு, அனுபவம் பெற்றவர்கள் வருவதில்லை.

அரசு பணியாளர் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் ஒரு தொழிலதிபரின் தேர்வு அவரது ஐஏஎஸ் திறனை விட சந்தை வீதியில் சாமர்த்திய சாலியா? என்பதாக இருத்தல் வேண்டும் என்று தானே பார்ப்பார்கள்.

உப்பு விற்கும் பொதுத்துறை நிறுவனத்தின் தலைவர் எப்படி நல்ல அரசு துறை செயலாளர் அனுபவம் பெற்றிருக்க முடியும்?

ஆகவே பல்வேறு வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த அனுபவங்களை பெற்றுள்ள மல்லிகா சீனிவாசன் இப்பொறுப்பிற்கு நல்ல தேர்வு என்று தான் தோன்றுகிறது.

பெண் நிர்வாகிகளின் செயல் திறன் உலக பொருளாதார விவகாரங்களில் ஆணுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வரும் காலகட்டத்தில் மல்லிகாவின் வருகையால் நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் செயல் திறன் மேம்பட்டு செயல்பட வைப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வாரியத்தின் முதல் ‘கார்ப்பரேட்’ தலைவர் என்பதுடன் சர்வதேச வர்த்தகத்திலும் முன் நிற்கும் ஒரு பெண் தொழில் அதிபர் என்பதாலும் இவரது தேர்வு மிகச் சரியானது தான்.

டிவிஎஸ் குடும்பத்தில் இருந்து வந்து பாரம்பரிய மிக்க அமால்கமேஷன் குரூப்பின் அனுபவசாலியாக இருக்கும் மல்லிகா சீனிவாசனின் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இப்புதிய பொறுப்பு பல்வேறு சவால்கள் நிறைந்தது தான்.

அவரது தந்தை சிம்சன் குரூப் தலைவர் சிவசைலம் சந்தித்த சவால்களை சமாளித்த அனுபவங்கள் மல்லிகாவுக்கு பால பாடமாகும்.

இப்படி பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ள அவர் நாட்டின் பல முன்னணி வர்த்தக சங்கங்களில் ஈடுபாடுடன் செயல்பட்ட அனுபவமும் பெற்றவர் ஆவார்.

ஆகவே தமிழகத்தின் பெருமைமிகு பெண் தொழில் அதிபர் மல்லிகா சீனிவாசன் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் சிறப்பான பணியில் ஈடுபட உயர்பதவிக்கு சென்றிருப்பது தமிழகத்திற்கு பெருமையாகும்.

மக்கள் குரல் – டிரினிட்டி மிரர் மல்லிகாவின் சேவை நாட்டுக்கு சிறப்பு சேர்க்கட்டும், சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் அவரை வாழ்த்துகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *