செய்திகள்

நாகாலாந்தில் அனைத்து கட்சிகளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு

கோஹிமா, மார்ச் 6–

நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் என்டிபிபி – பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அங்கு எதிர்கட்சிகள் இல்லாத ஆட்சி அமைய உள்ளது.

நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்தில் முந்தைய கூட்டணியான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் என்டிபிபி- 25, பாஜக-12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. என்சிபி-7, என்பிபி-5, எல்ஜேபி (ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்), ஆர்பிஐ (அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், ஜேடி(ஐ) ஒரு இடத்திலும், சுயேட்சைகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.

நாகாலாந்து மாநிலத் தேர்தலில் இதற்குமுன் இத்தனைக் கட்சிகள் வெற்றி பெற்றது கிடையாது. இத்தனைக்கும் எல்ஜேபி (ராம் விலாஸ்), ஆர்பிஐ (அத்வாலே) ஆகிய இரண்டு கட்சிகளும் மாநிலத் தேர்தலுக்கு புதிதாக வந்திருக்கும் கட்சிகள். பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை என்டிபிபி – பாஜக கூட்டணி இன்னும் உரிமை கோரவில்லை. இந்த நிலையில், இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வெற்றி பெற்ற பிற கட்சிகள் தங்களின் நிபந்தனையற்ற ஆதரவினை அளிக்க முன்வந்துள்ளன.

மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியான என்சிபி, நிபந்தனையற்ற ஆதரவுக்கான கடிதத்தினை என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோவிடம் கடந்த சனிக்கிழமை வழங்கியது. அதேபோல, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்சிகளில் ஒன்றான என்பிஎப் கட்சியின் எம்எல்ஏவும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான அச்சும்பெமோ கிகோன், “எங்கள் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்களும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளும், என்டிபிபி- பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், நாகாலாந்தில் மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி ஆட்சி அமைய உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *