போஸ்டர் செய்தி

நள்ளிரவில் ஏ.சி. தீப்பிடித்து தந்தை, தாய், மகன் பலி

விழுப்புரம், மே 15–
திண்டிவனம் அருகே காவேரிபாக்கத்தில் நேற்று நள்ளிரவு மின் கசிவு காரணமாக ஏ.சி. தீப்பிடித்தில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், காவேரிபாக்கம் சுப்புராயபிள்ளை வீதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 60). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 55). இவர்களுக்கு கோவர்த்தனன் (வயது 30), கவுதமன் (வயது 26) என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் கோவர்த்தனன், அண்ணா தி.மு.க. நகர மாணவர் அணி தலைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகியுள்ளது. அவரது மனைவி தீபகாயத்ரி (வயது 24). கவுதமன் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்றிரவு வழக்கம் போல் ராஜு, அவரது மனைவி கலைச்செல்வி, மகன் கவுதமன் ஆகியோர் ஒரு அறையிலும், கோவர்த்தனனும், அவரது மனைவி தீபகாயத்திரி மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். ராஜு படுத்திருந்த அறையில் நள்ளிரவு ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீப்பிடித்து புகை கிளம்பியது. பக்கத்து அறையிலிருந்து புகை வருவதை உணர்ந்த கோவர்த்தனன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் எழுந்து வந்து பார்த்த போது, அந்த அறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் கூச்சல் போட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீ முழுவதும் அணைக்கப்பட்டது. அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது, ராஜு, அவரது மனைவி கலைச்செல்வி மகள் கவுதமன் ஆகிய 3 பேரும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
தகவல் கிடைத்ததும் திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவினால் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலயே பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *