சினிமா செய்திகள்

நயன்தாரா–விக்னேஷ் சிவன் தம்பதியர்க்கு இரட்டை ஆண் குழந்தை

திரையுலகினர் வாழ்த்து

சென்னை. அக்.10-

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர்க்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த செய்தியை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த நயன்தாரா 2005ல் தமிழில் ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த நிலையில் நயன்தாரா–விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “நானும், நயன்தாராவும் அப்பா அம்மா ஆகி விட்டோம் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிகள் இணைந்து குழந்தைகள் வடிவில் வந்துள்ளன. எங்கள் உயிர், உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களும் தேவை” என்று பதிவிட்டு உள்ளார். அதோடு குழந்தைகளின் கால்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் வெளியிடவில்லை. இதனால் அவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களூம் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளை வளர்ப்பதற்காக புதிய படங்களில் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவு செய்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *