சிறுகதை

நபிகள் வழி | மலர்மதி

ப்பாருக்கும் ஜலீலுக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களாகப் பேச்சுவார்த்தை இல்லை.

சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறுதான் காரணம்.

சின்னவன்தானே போகட்டும் என்று கப்பாரோ, மூத்தவர் சொல்பேச்சைக் கேட்டு நடப்போம் என்று ஜலீலோ விட்டுக்கொடுத்திருந்தால் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக வெடித்திருக்காது.

இரு சகோதரர்களுக்கும் இடையே எழுந்த ஈகோதான் உறவு முறியக் காரணம்.

யாரும் யாரையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

கிராமத்திலிருந்த பூர்வீகச் சொத்தை வேறு யாரோ சொந்தம் கொண்டாட அந்தப் பார்ட்டியிடமிருந்து சொத்தை மீட்டெடுக்க வழக்குத் தொடர்ந்தார் கப்பார். தன்னிடமிருந்த நகை நட்டு, சேமிப்பு என எல்லாவற்றையும் கொட்டி கடுமையாகப் போராடினார்.

அவர் உழைப்பு வீண் போகவில்லை. அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவழியாக தங்கள் பூர்வீகச் சொத்தை மீட்டெடுத்ததில் பெருமகிழ்ச்சி கப்பாருக்கு.

ஜலீல் ஒரு பைசாகூட செலவழிக்கவில்லை. ஏன், என்ன என்றுகூட எட்டிப் பார்க்கவில்லை. வெறும் வேடிக்கைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

சில நாட்களுக்குப் பிறகு சொத்து பிரிக்கையில் தனக்கு அதிக பங்கு வேண்டுமென ஒத்தைக்காலில் நின்றான் ஜலீல்.

“மூத்தவன் தன் மனைவியின் நகை அனைத்தையும் இழந்து இந்த சொத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறான். அவன் சொல்வதைப் போல் நீதான் கேட்க வேண்டும் என்று ஒரு வார்த்தைகூட சின்னவன் ஜலீலைப் பார்த்துச் சொல்லவில்லை தாயானவள். அவளும் ஜலீல் பக்கம் நிற்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“எனக்கு இந்த சொத்தும் வேண்டாம், உறவும் வேண்டாம்.” என்று உதறிவிட்டு வந்தவர்தான். மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. எந்த ஒரு நல்லது கெட்டது என்று கப்பாரும் ஜலீலும் கலந்துக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

இடையே பல முறை உறவினர்கள், நண்பர்கள் பலர் இருவர் சார்பாகவும் வந்து சமாதானப்படுத்த முயற்சித்துத் தோற்றுப்போயினர்.

பழையபடி ஒன்று சேர கப்பாரும் ஜலீலும் பிடிவாதமாய் மறுத்து விட்டனர்.

‘இவ்வளவு பிடிவாதக்காரர்களை நாம் கண்டதில்லையப்பா’ என ஒதுங்கிக் கொண்டனர் சமாதானம் பேச வந்தவர்கள்.

உறவினர் வீட்டு சுப காரியங்களில் கலந்துக்கொள்ள கப்பார் வருவதாக இருந்தால் ஜலீல் அவ்விழாவைத் தவிர்ப்பதும் ஜலீல் கலந்துக்கொள்வதாக இருந்தால் கப்பார் தவிர்ப்பதும் வழக்கமாகப் போயிருந்தது. அந்த அளவுக்குப் பகை வேர் விட்டு வளர்ந்திருந்தது.

மீலாது நபி விழாவையொட்டி பெரிய பள்ளி வாசலில் சிறப்புச் சொற் பொழிவுக்கு ஏற்பாடாகியிருந்தது.

மார்க அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் மக்ரீப் தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு ஆரம்பமானது.

கப்பாரும் ஜலீலும் வந்திருந்தனர். ஆனால், அவர்கள் அந்தக் கூட்டத்தில் வெவ்வேறு மூலையில் அமர்ந்திருந்தனர்.

ஒரே பள்ளிவாசலில் இருவரும் வந்திருப்பது இருவருக்கும் தெரியாது.

சிறப்புச் சொற்பொழிவாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்களுக்காக வழங்கிய நபிமொழிகள் பற்றி விவரமாக விளக்கிப் பேசினார்.

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.” என்ற நபிமொழியை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்தது.

“சை… அவன் சின்னவன். பிடிவாத குணம் கொண்டவன். மூத்தவனான நான்தான் விட்டுக்கொடுத்திருக்க வேண்டும்.” என்று கப்பாரும், “ஆயிரம்தான் இருந்தாலும் அண்ணனை எதிர்த்துப் பேசியிருக்கக்கூடாது.” என்று ஜலீலும் தத்தம் தவறுகளை எண்ணி வருந்தினர். விட்டுப்போன உறவுக்காகத் தவித்தனர்.

உறவை முறித்துக்கொண்டு வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றால் அவனுக்கு நரகம்தானே? நபிகள் மொழிப்படி நடப்பதுதானே நல் வழி? அதற்கு நேர் மாறாக நடப்பவனுக்கு நரகம் நிச்சயம் என்பது இருவருக்கும் புரிந்தது.

நினைக்கும்போதே நெஞ்சம் வெடித்துவிடும்போல் இருந்தது ஜலீலுக்கு.

அப்போது அவன் பார்வை கூட்டத்தில் அமர்ந்திருந்த அண்ணன் கப்பார் மீது பட்டது.

சிறிதும் தாமதிக்காமல் எழுந்து அவரை நோக்கிப் போனான் ஜலீல்.

அவனைக் கண்டதும் கப்பாரும் உணர்ச்சிவசப்பட்டார்.

“அண்ணா…”

“தம்பி…”

இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டனர்.

உதறிவிட்ட உறவு மீண்டும் ஒட்டிக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *