எது பற்றி எழுதினாலும் இறுக அமர்ந்திருக்கும் எழுத்துக்கள் காதலைப் பற்றி எழுதும் போது அதற்கு ஆயிரம் இறக்கைகள் முடித்து விடுகின்றன.
நயாகரா நீர்வீழ்ச்சியைப் போன்று வேகமும் இமயமலை போன்று உயரமும் பெரும் பள்ளத்தாக்கை போன்ற ஆழமும் எழுத்துக்களில் வந்து விழுந்து விடுகின்றன.
வார்த்தைகள் வகிடெடுத்து வண்ணப் பூச்சூடி காதல் கவிதையாய், கதையாய் மாலையாய் கோர்த்து மணம் சேர்க்கின்றன .
நிலா நேசன் எழுதிய கதைக்கு இன்று ஆயிரம் இறக்கைகள் முளைத்து இருந்தன.
அவள் பெயர் தெரியாத ஒரு பறவை .வாசம் வீசும் பூ . மாமிசமேகம் . மேனி இலக்கியம் இப்படி எது வேண்டுமானாலும் அவளை அழைக்கலாம்.
கல்லூரி வகுப்புகளை விட நிலா நேசன் கல்லூரி நூலகத்தில் இருந்தது தான் அதிகம் .
சொல்லித் தரும் பாடங்களை விட புத்தகத்தில் இருக்கும் எழுத்துக்கள் தான் அவனை இமயம் வரை கூட்டி சென்று இருக்கின்றன .
வாசிப்பது என்பது அவன் உயிரோடு கலந்த ஒன்றாக இருந்தது.
அப்படி அவன் நூலகத்திற்கு போகும் போதெல்லாம் ஒரு மாமிச பறவை மென்மையான மேகம் எதையாவது ஒரு நூலை எடுத்து வாசித்துக் கொண்டுதான் இருக்கும் .
அந்தப் பறவையை பார்ப்பான் ; ஆனால் அந்தப் பறவை நிலா நேசன் பக்கம் சிறகு விரிப்பதே இல்லை .
அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .
என்ன இது? இந்தப் பெண். நம்மை சட்டை செய்வதில்லையே ?என்று அவன் புத்தகத்தை விரித்து வைத்திருந்தாலும் பார்வை எல்லாம் அந்தப் பெயர் தெரியாத பறவை மீது தான் பதிந்திருக்கும் .
இன்று பேசிவிடலாம் ; நாளை பேசிவிடலாம் : நாளை மறுநாள் பேசிவிடலாம் என்று நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டு தான் இருந்தானே ஒழிய பேசிய பாடில்லை.
அவள் சில நேரங்களில் அருகில் இருந்தும் கூட அவனுக்கு வார்த்தைகள் வர மறுத்து விடுகின்றன.
இந்த இம்சை அவஸ்தையில் அவளின் முகத்தை மட்டும் அச்சுப் பிசகாயாமல் நிலா நேசன் தன் இதயத்தில் ஒட்டி வைத்திருந்தான்.
தினந்தோறும் பார்க்கும் அந்தப் பூவிடம் இன்று பேசிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
ஆனால் அவள் ஏதோ காதல் கதையில் மூழ்கி இருந்தாள்
புத்தகம் பார்ப்பதும் படிப்பதும் சிரிப்பது மாதிரி இருந்தது.
இப்போது தான் அவளுக்கு நிலா நேசனைப் பற்றிய அடையாளம் தெரிந்திருக்கிறது போல. புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே சிரிப்பாள். ஓரக்கண்ணால் பார்த்து சிரிப்பாள். அது புத்தகத்தில் இருக்கும் கதைக்கான சிரிப்பா ? அல்லது நிலாநேசனிடம் சிரிக்கும் சிரிப்பா? புத்தகத்தைப் பார்ப்பது போல் பார்த்து சிரிக்கிறாளா ?என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
ஆனால் முகத்தை ஒரு பக்கமாக திருப்பி வைத்துக் கொண்டு நிலா நேசனுக்கு முழு மதியின் தரிசனம் தருவாள் . பாதி முகத்தை காட்டுவதில் அவளுக்கு விருப்பமில்லை போல. முழு முகத்தையும் நிலாவின பக்கமே திருப்பிவைத்திருப்பாள்.
அட்ச ரேகை தீர்க்க ரேகை ஓடாத ஒரு அழகிய முகம். இரண்டு கன்னங்களும் இரண்டு ஆப்பிள்கள். இரண்டு கண்களும் இரண்டு திராட்சைகள். இரண்டு இதழ்களும் இரண்டு கோவை பழங்கள் என்பதை போல் அவள் அழகின் மொத்தமும் குத்தகைக்கு எடுத்தவள் போல அங்கே அமர்ந்திருப்பாள்
இப்போதெல்லாம் நிலா நேசன் அதிக நேரம் வகுப்பறையில் இருப்பதில்லை . நூலகத்தில் தான் கூடு கட்டி இருந்தான் .
அவளை பார்ப்பதும் அவள் புத்தக வாசிக்கும் அழகை பார்ப்பதும் இப்படி அவனுக்கு நாட்கள் கடந்து கொண்டிருந்தன.
அந்த நூலகத்திற்குப் பொழுதுபோக்காக புத்தகம் படிக்க வந்தவன் இன்று எழுதப்படாத ஒரு இலக்கியம் நேரில் கிடைத்ததை நினைத்து மகிழ்ந்து போனான்.
இன்று பேசிவிடலாம் என்று முடிவு எடுத்து அவள் அருகில் சென்ற போது அவளுக்கு நேரமாகிவிட்டது போல புத்தகத்தை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு சரசரவென்று நூலகத்தை விட்டு வெளியேறினாள்.
இது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது என்ன இன்னைக்கு பேசலாம்னு நினைச்சா போய்ட்டாங்க ? என்று பெருத்த வருத்தப்பட்டான்.
மறுநாளும் வந்தாள் வாசித்தாள் நிலா நேசன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் நிலா நேசன் பார்ப்பதை அவள் அறிந்திருப்பாள் போல திடீரென்று அந்தப் பெண் நிலாநேசன் அருகிலேயே வந்துவிட்டாள்.
என்ன சார் என்ன படிக்கிறீங்க? என்று உதடு திரந்து கேட்டபோது நிரா நேசனுக்கு உதறல் ஏற்பட்டது. உளற ஆரம்பித்தான்.
நல்லாப் படிங்க சார். இந்த சந்தர்ப்பம் எல்லாம் பின்னாடி உங்களுக்கு கிடைக்காது .என்ன பார்த்து உங்க நேரத்தை நீ வேஸ்ட் பண்ண வேணாம். எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு.
ஏதோ சும்மா வந்து இங்க நான் படிச்சிட்டு இருக்கேன். என்ன நெனச்சு உங்க வாழ்க்கைய வீணாக்க கூடாது . நான் உங்களுக்கு கிடைக்க மாட்டேன். இங்க இருக்கிற புத்தகங்களை வாசிங்க .கண்டிப்பா உங்களுக்கு அறிவாவது கிடைக்கும் என்று சொல்லிவிட்டு சென்றாள் அந்த பெயர் தெரியாத பறவை .
அவள் பேசிய பேச்சில் அவமானத்தை உணர்ந்த நிலாநேசன் அன்றிலிருந்து நூலகம் வருவதை நிறுத்தினான்.
இப்போது எல்லாம் அந்தப் பெயர் தெரியாத பறவை நிலா நேசன் அமர்ந்திருந்த இடத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவளும் இப்போது புத்தகம் வாசிப்பதில்லை . அவள் கவனமெல்லாம் நிலா நேசன் அமர்ந்த அந்த இடத்தை பார்ப்பதிலேயே இருந்தது.