சென்னை, மார்ச் 5–
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்துவிட்டு, தலைமறைவான சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலின் நிர்வாகி ஹரீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவா, யூடியூபர்கள் கோபி, விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷ் உள்பட 50 பேருக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் டாக்டர் பட்டத்தை வழங்கினார். ஆனால் விழா ஏற்பாட்டாளர்களால் கொடுக்கப்பட்ட இந்த பட்டம் போலியானது என தெரியவந்தது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்திற்கும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்தார். டாக்டர் பட்டம் பல்கலைக்கழகம்தான் தர வேண்டும். தனியார் நிறுவனம் கொடுக்கக் கூடாது. இதுவே சட்டவிதிமீறல்தான். எனவே விழா ஏற்பாட்டாளர் மீது நாங்கள் போலீசில் புகார் கொடுப்போம் என்றார்.
நடிகர் வடிவேல் அந்த நிகழ்ச்சிக்கு வராததால் அவருடைய வீட்டுக்கே சென்று பட்டத்தை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் ஹரீஷ் மீது கோட்டூர்புரம் போலீசில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார் அளித்தார். இதனிடையே தன்னை சிறப்பு விருந்தினராகவே அழைத்தார்கள், தனக்கும் இந்த டாக்டர் பட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் விளக்கம் அளித்திருந்தார்.
முன் ஜாமீன் மறுப்பு – கைது
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஹரீஷை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரீஷ் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி டி.வி. தமிழ்செல்வி விசாரித்தார். இதுகுறித்து ஹரீஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஹரீஷ் அப்பாவி, அவர் எந்தவித குற்றத்தையும் செய்யவில்லை. சட்டத்திற்கு அப்பாற்பட்டும் நடக்கவில்லை என்றார்.
எனினும் ஹரீஷுக்கு முன்ஜாமீன் கொடுத்தால் அவர் விசாரணைக்கான ஆதாரத்தை கலைத்துவிடுவார் என அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி தமிழ் செல்வி தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஆம்பூரில் பதுங்கியிருந்த ஹரீஷை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த இடைத்தரகர் கருப்பையாவையும் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்தி தனியார் நிறுவனம் போலி டாக்டர் பட்டத்தை வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.