நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, மார்ச் 20–
‘கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகச் செலவுள்ள பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போதிலும், முன்னெப்போதுமில்லாத அளவில் பல கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவியேற்கும் போது சுமார் 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 80,000 கோடி ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளோம்’ என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டுக்கான (2023–2024) பட்ஜெட்டை இன்று (திங்கள்) சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘இது, கோவிட் பெருந்தொற்றிற்கு முந்தைய 2019–20 ஆம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டாலும், ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
இந்த அரசு பதவியேற்றபோது சந்தித்த நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும். 2006 முதல் 2011 வரையுள்ள ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரி எட்டு சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020–-21 ஆம் ஆண்டு 5.58 சதவீதமாகக் குறைந்தது.
மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் இந்த விகிதம் குறைவாகவே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ள போதிலும், இதனை மேலும் உயர்த்தி நலத்திட்டங்களுக்கான வருவாய் ஆதாரங்களை ஈட்டிட முனைப்போடு செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.