செய்திகள்

தோள்சீலை போராட்டத்தை அரசியல் போராட்டமாக கருத வேண்டும்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு


நாகர்கோவில், மார்ச்.7-

தோள்சீலை போராட்டத்தை அரசியல் போராட்டமாக கருத வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.

நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும் போது கூறியதாவது:-

தோள்சீலை போராட்டம் நம் சரித்திரத்தில் மைல் கல் என கூறலாம். அதன் 200-ம் ஆண்டை கொண்டாடும்போது கலந்துகொள்ள முடிகிறது என்பது மகிழ்ச்சி. கேரளத்தில் மார் மறைக்கல் சமரமும், தமிழ்நாட்டின் தோள்சீலை போராட்டமும் ஒன்றுதான்.

தோள்சீலை போராட்டத்தின் சமகால முக்கியத்துவம், அரசியல் முக்கியத்துவத்தையும் விளக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் இங்கு வந்துள்ளார். திருவள்ளுவர், மகாகவி பாரதியார், பெரியார், அய்யா வைகுண்டர், ராமலிங்க அடிகளார், நாராயணகுரு ஆகியோர் நினைவுகள் எனக்கு வருகின்றன. அவர்களின் புரட்சியால் ஏற்பட்ட இடதுசாரி சிந்தனைகள், பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நாம் ஏற்றெடுக்க வேண்டும்.

சனாதன தர்மத்தின் நாடு என்று அறிவித்த மார்த்தாண்ட வர்மா பற்றி சொன்னார்கள். இதை சனாதன தர்மம் என்ற பெயரில் சங்க் பரிவார் பழைய மன்னராட்சியை கொண்டு வரப்பார்க்கிறது. ஜனநாயகம் இவர்களுக்கு அலர்ஜி. அதற்கு வேறு ஆதாரம் தேவை இல்லை. ஜனநாயகம் மரியாதைக்குரியது என்பதும், அது சமூக பிரச்சினைக்கு ஒரு தீர்வு என்ற வாதம் உயரும் காலம் இது. லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்ற முத்திரா வாக்கியத்தை அவர்கள் உபயோகிக்கிறார்கள். இது சாதாரணமாக எதிர்க்க வேண்டியது அல்ல. உலகில் இந்துத்துவம்தான் இவ்வளவு சிறப்பான வாக்கியத்தை முன்வைத்துள்ளது. இதைத்தான் நம் நாட்டில் வாதமாக முன் வைக்கிறார்கள். இந்த வரியின் முன்பு உள்ள வரிகளை வேண்டுமென்றே மறைத்து வைக்கிறார்கள். பசுவுக்கும், பிராமணனுக்கும் சுகம் உண்டாகட்டும் என்ற வார்த்தையை மறைத்து வைத்துகொண்டு பேசுகிறார்கள். பசுவுக்கும் பிராமணனுக்கும் சுகம் ஏற்பட்டால் உலகம் அமைதியாக இருக்கும் என்கிறார்கள்.

அக்காலத்தில் ஏற்பட்ட சமூக நீதிகளை மறைந்துவிட்டதாக நாம் நினைக்க வேண்டாம். இங்கு வேறு வடிவில் உள்ளது. அதனால்தான் வட இந்திய மாநிலங்களில் தலித், பிற்படுத்தப்பட்டவர்கள் துன்பப்படுத்தப்படுகிறார்கள்.

தோள்சீலை போராட்டம் சாதி ரீதியான போராட்டம் மட்டுமல்ல. அதில் அரசியல் உள்ளடக்கம் இருந்தது. ராஜாதிபத்தியத்துக்கும் அதற்கு நிழல் கொடுத்த சாம்ராஜ்யபத்தியத்துக்கும் எதிராக இருந்தது. எனவே தோள்சீலை போராட்டத்தை அரசியல் போராட்டமாக கருத வேண்டும். இந்தியாவில் அரசியல் பெரும்பான்மை மதரீதியான சக்திகள் நாட்டுக்கு எதிராக மாறியுள்ளது. ஆட்சி திறமை என்ற பெயரில் நாட்டை மத அடிப்படையில் கொண்டுவர பார்க்கிறார்கள். மத சிறுபான்மையினரை பயமுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முறியடிக்க வேண்டும்

தாங்கள் உடைக்க முடியாத சக்தி என்ற பாரதீய ஜனதா வாதம் தேசிய அரசியலில் உடைவதை இன்று காண முடிகிறது. 2024-ல் பாரதீய ஜனதாவின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற கோஷம் அதில் உயர்ந்தது. சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பாரதீய ஜனதாவுடன் உள்ளது. மராட்டியம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களிலும் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டெல்லி மாநகராட்சி பாரதீய ஜனதா கையைவிட்டு போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்துவரும் அரசியலின் சரியான அறிகுறிகள். பாரதீய ஜனதாவின் துன்பத்தை மக்கள் அறிந்து கொள்கிறார்கள். அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங்க்பரிவார் பிரிவினை அஜெண்டாவை புகுத்துகிறார்கள்.

ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்ற பார்க்கிறார்கள். தி.மு.க மொழி பாதுகாப்பு போராட்டம் நடத்தியது. இந்தி திணிப்புக்காக அவர்கள் முயல்கிறார்கள். மத்திய ஏஜென்சிகள் மூலம் அரசியல் செய்வது நமக்கு தெரிகிறது. அதை இன்னும் அதிகரிக்க பார்க்கிறார்கள். பெருமுதலாளித்துவ அரசியல் செய்கிறார்கள். எல்.ஐ.சி-யின் ரூ.70 ஆயிரம் கோடியை ஒருவர் விழுங்கியுள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். சி.பி.ஐ மீதுள்ள நம்பிக்கை தகர்ந்துள்ளது. இந்துத்துவ தந்திரம் ஆபத்தை உண்டாக்கும். மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமை நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்கு தமிழக முதலமைச்சருக்கு ஒரு அழைப்பை கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட்டத்தின் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்தப்போகிறோம். அதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வரவேண்டும் என அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *