சிறுகதை

தேனீ வளர்க்கும் தேனப்பன்! | சின்னஞ்சிறுகோபு

இது கொரோனா காலம். இது கொரோனாவெல்லாம் வராத சென்ற வருடத்தில் நிகழ்ந்தது!

என் பெயர் ராமநாதன். நான் பூவரசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது படிக்கிறேன். வயது பத்து ஆகிறது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்காது. பரவாயில்லை; இப்போதாவது தெரிந்துக் கொள்ளுங்கள்! நான் சூப்பராக படித்து நூற்றுக்கு நூறு மார்க் வாங்கும் மாணவன் என்றெல்லாம் உங்களிடம் பொய் சொல்ல விரும்பவில்லை. படிப்பில் 35ம்,40ம், ஏன் சில சமயம் 20, 25 கூட மார்க் வாங்கும் மாணவன்தான்!

பள்ளிக்கூடத்தில் எனது ஆறாம் வகுப்பு ‘சி ‘ பிரிவில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன் பெயர் தேனப்பன். அவன் என்னைவிட மக்கு!

அவன் அப்படி ஒன்றும் என் நெருங்கிய நண்பனல்ல! என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான், அவ்வளவுதான்! அதிகமெல்லாம் பேச மாட்டான்!

அன்று அறிவியல் ஆசிரியர் சண்முகம் பாடம் நடத்துவதை விட்டு விட்டு, எங்களிடம் கலகலப்பாக பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்.

யார் யார் வீட்டில் என்னென்ன Pet Animal வளர்க்கிறீர்கள் என்று ஆர்வத்துடன் கேட்டார்.

பாலு “நாய்” என்றான். அதோடு திருஞானம் ராஜேந்திரன், சுரேஷ் என்று பலரும் ‘நாய்’ என்றுதான் சொன்னார்கள். வெங்கடேசன் மட்டும் “பூனை” என்றான்.

என்னைப் பார்த்து, ” ஏண்டா ராமநாதா, நீ என்ன வளர்க்கிறாய்?” என்று கேட்டார்.

நான், “ஒன்றும் வளர்க்கலை சார்!” என்றேன்.

“பரவாயில்லை, அறிவையாவது வளர்த்துக் கொள்!” என்றார்.

வகுப்பே ‘கொல்’லென்று சிரித்தது! எனக்கு என்னவோ போலிருந்தது!

அதற்கு அடுத்ததாக தேனப்பனைப் பார்த்து, “நீ எதாவது வளர்க்கிறாயா?” என்று கேட்டார்.

அவன் “தேனீ வளர்க்கிறேன் சார்!” என்றான்.

ஆசிரியருக்கே ஆச்சரியம்! “அட, நல்ல விஷயம்தான். அதான் உங்கப்பா உனக்கு தேனப்பன் என்று பொருத்தமாக பேர் வைத்திருக்கிறார்” என்று பாராட்டினார். தேனீ Pet Animalலா என்றெல்லாம் அவர் கொஞ்சமும் யோசிக்கவே இல்லை.

அப்போது இடைவேளை மணியடித்ததால் அறிவியல் ஆசிரியர் போய்விட்டார்.

எனக்கு மட்டும் தேனப்பனை பற்றியும் தேனை பற்றியுமே மனதில் நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தது.

தேனீ வளர்ப்பவர்களை பற்றி நான் கேள்விப் பட்டிருந்தேன். சில இடங்களில் தோட்டங்களில் மரப்பெட்டிகளில் தேனீ வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். தேனீ வளர்ப்பவர்கள் வீட்டில் பாட்டில் பாட்டிலாக தேன் இருக்கும் என்றும் அதை அவர்கள் நல்ல விலைக்கு விற்பதுடன், தெரிந்தவர்கள் வந்தால் இனாமாக கொஞ்சம் தேன் கொடுப்பார்கள் என்றும் கூட கேள்விப் பட்டிருந்தேன்!

நான் தேனப்பனிடம், “நீ தேனீ வளர்க்கிற விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று கேட்டேன்.

அதற்கு அவன் ” நீ கேட்கவில்லையே!” என்றான். எனக்கு அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை!

அப்போதுதான் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, பள்ளிக்கூடம் லீவு என்பது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

” நாளை காலையிலே நான் உங்கவீட்டுக்கு வந்து, தேனீ வளர்க்கும் முறையை பார்க்கலாமா?” என்று கேட்டேன்.

அந்த தேனப்பனுக்கு எங்கள் கிராமத்துக்கு பக்கத்திலிருக்கும் ஆலம்பட்டிதான் சொந்த ஊர். அது எங்கள் ஊரிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் இருந்தது. ஒரு தடவை அவன் தனது வீடு பிள்ளையார் கோவில் தெருவில் முதல் வீடு என்று சொல்லியிருந்தது என் ஞாபகத்திற்கு வந்தது.

“காலையிலே வரவேண்டாம்! எங்கப்பா வீட்டிலே இருப்பார். தேனீ வளர்ப்பதையெல்லாம் நீ வந்துப் பார்த்தா திட்டுவார். நீ வேண்டுமானால் சாயந்திரம் ஒரு நாலுமணிக்கு வீட்டுக்கு வா!” என்று பட்டும் படாமல் சொன்னான். ஏனோ அவன் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனக்குதான் அவங்க வீட்டிலே தேனீ வளர்ப்பதை பார்க்க வேண்டும் என்று ஒரே ஆர்வமாக துடிப்பாக இருந்தது. என் காதில் தேனீக்களின் ரீங்காரம் கூட கேட்பது போலிருந்தது!

ஞாயிற்றுக்கிழமை. காலையிலிருந்தே எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. குட்டிப்போட்ட பூனையை போல அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தேன். சாயந்திர நேரம் எப்படா வரும் தேனப்பன் வீட்டுக்கு போகலாமென்று ஆவலுடன் இருந்தேன்.

அவன் எப்படியும் எனக்கு சாப்பிட கொஞ்சம் தேன் கொடுப்பான் என்று நம்பிக்கையிருந்தது. அடிக்கடி வெறும் வாயை சப்புக்கொட்டிக் கொண்டேயிருந்தேன்!

மாலை நாலரை மணிக்கு தேனப்பன் வீட்டுக்கு கிளம்பினேன். இரண்டு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்போது திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது. அந்த தேனப்பன் தேனை கொஞ்சம் அதிகமாக கொடுத்தாலும் கொடுப்பான். அப்படி கொடுத்தால் எடுத்து வர உதவுமேயென்று ஒரு வாட்டர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டேன்!

தெருவில் இறங்கியதுமே பக்கத்து தெருவில் தேன்மொழி வருவதைப் பார்த்தேன். நல்ல சகுனம்தான் என்று நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் ராகு காலம் ஆரம்பமாகியிருக்கிறது எனக்கு அப்போது தெரியாது!

அரைமணி நேரம் நடந்து தேனப்பன் வீட்டை அடைந்தபோது நல்லவேளை, வீட்டு வாசலிலேயே தேனப்பன் நின்றுக் கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்ததும் அவன் சிநேகிதமாகவெல்லாம் சிரிக்கவில்லை!

எனக்கு ‘திக்’ கென்றது. ஒரு சமயம் குடிக்க தேன் கொடுக்க மாட்டானோ?

என்னைப் பார்த்ததும் ‘என்ன?’ என்பதுபோல் பார்த்தான்.

“தேனீ வளர்ப்பதை பார்க்க வந்திருக்கிறேன்” என்றேன்.

“இப்படியே, இங்கே திண்ணையிலேயே உட்காரு. இதோ வர்றேன்” என்று சொல்லியபடி வீட்டுக்குள்ளே சென்ற தேனப்பன், சிறிது நேரத்தில் ஒரு பாட்டிலுடன் வந்தான்!

‘அட, தேன் பாட்டிலுடன் வருகிறானே’ என்று நான் மகிழ்ச்சியுடன் உற்றுப் பார்க்கும்போதே, அந்த கண்ணாடி பாட்டில் வெற்றுப் பாட்டில் போல தெரிந்தது!

தேனப்பன் ஒரு வெறும் கண்ணாடிப் பாட்டிலுடன் வந்து என்னிடம் காட்டினான். அந்த வெற்று கண்ணாடிப் பாட்டிலின் உள்ளே ஒரு தேன் பூச்சி கிடந்தது! கூடவே சில சிறு மல்லிகைப் பூக்களும் கிடந்தன!

நான் திடுக்கிட்டுப்போய், “என்ன இந்த பாட்டிலில் ஒரு தேனீ கிடக்குது?” என்றேன்.

“முந்தாநாள், இந்த பாட்டில் கிணற்றடியில் கிடந்தபோது, இந்த பாட்டிலின் உள்ளே ஒரு தேன்பூச்சி போவதைப் பார்த்தேன். சட்டென்று இதன் மூடியை எடுத்து மூடிவிட்டேன். இந்த தேனீயைதான் இரண்டு நாளா வளர்க்கிறேன்!” என்றான் தேனப்பன்.

எனக்கு தலையை சுற்றியது. தேனப்பன் கொஞ்சம் வெகுளி என்று எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு வெகுளியாக இருப்பான் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

நான் முழிப்பதைப் பார்த்த தேனப்பன், “தேனீ மூச்சு விட காற்று வேண்டும் என்பதற்காக, இந்த பாட்டிலின் மூடியில் கோணி ஊசியால் சில ஓட்டைகள் போட்டிருக்கிறேன். அது தேனடுத்து சாப்பிட வேண்டும் என்பதற்காக சில பூக்களையும் பறித்து உள்ளே போட்டிருக்கிறேன் பார்!” என்றான்.

‘அடே மடையா, நீ நல்ல புத்திசாலிதான்’ என்று நினைத்துக் கொண்டேன்!

” ரெண்டு மைல் தூரம் இந்த தேனீயை பார்க்க நடந்து வந்திருக்கிறாய். வேண்டுமானால் இதன் மூடியை லேசாக திறந்துப் பாரு!” என்றபடி அந்த பாட்டிலின் மூடியை திறந்து என் முகத்திற்கு அருகே காட்டினான்!

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. பாட்டிலின் உள்ளே வெளிக்காற்று வேகமாக சென்றபோது, பாட்டிலின் அடியில் கிடந்த அந்த தேனீ ‘விர்’ரென்று மேலெழுந்து பறந்து வந்து என் மூக்கின் மீது உட்கார்ந்து ‘சுரீ’ரென்று கொட்டிவிட்டு பறந்தது. இரண்டு நாளாக அடைப்பட்டுக் கிடந்த ஆத்திரம் அதற்கு!

நான் ‘ஐயோ’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி எங்கள் ஊரை நோக்கி ஓடினேன்! தேனீயோ கிழக்கு பக்கமாக பறந்துப் போனது. பறந்தோடும் எங்கள் இருவரையும் பார்த்து திகைத்து நின்றான் தேனீ வளர்த்த அந்த தேனப்பன்!

நான் அழுதுக்கொண்டே எங்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்தபோது, வலி ஓரளவு குறைந்திருந்தது. ஆனால் மூக்குதான் எலுமிச்சம் பழம் மாதிரி வீங்கியிருந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *