ஐதராபாத், டிச. 27–
தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயன்றதாக எழுந்த விவகாரத்தில் சந்திரசேகர ராவ் அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தடைவிதித்தும், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநில ஆளும் கட்சியாக டி.ஆர்.எஸ். கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் சேர்த்து முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுக்க டெல்லியைச் சேர்ந்த நந்தகுமார், சின்மையாஜி, ராமசந்திர பாரதி ஆகியோர் முயன்றதாக கூறப்பட்டது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ.100 கோடி கொடுக்க அவர்கள் முன்வந்ததாக கூறி அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது.
சிபிஐ விசாரிக்க வேண்டும்
இது தொடர்பான வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. சிறப்பு புலனாய்வு போலீசார் சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என கூறி, கைதான மூவர் மற்றும் பாஜக தரப்பில் தெலுங்கானா மாநில உயநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்தும், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதே நேரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெலுங்கானா அரசு காவல்துறை தெரிவித்துள்ளது.