செய்திகள்

தென் மாவட்டங்களில் ஜவுளி தொழில் தொடங்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

Spread the love

சென்னை, மார்ச் 24–

பெரம்பலூர், நாகை மற்றும் தென் மாவட்டங்களில் ஜவுளித் தொழில் தொடங்கப்படும் என்று ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று கைத்தறி, துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சேலம், காஞ்சிபுரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ஜவுளித் தொழில் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அதுபோல பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் தென் மாவட்டங்களில் ஜவுளித் தொழிலை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. துணி வெட்டுதல், ஆடைகளாக தைத்தல், பேக்கிங் செய்தல் போன்ற சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழில்கள் இந்த மாவட்டங்களில் தொடங்கப்படும்.

ஈரோடு, காஞ்சிபுரம் சரக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு ரூ. 2 கோடியே 29 லட்சத்தில் கட்டிடம் கட்டப்படும்.

காஞ்சிபுரம் பட்டு பூங்காவில் சாயச்சாலைகள்

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் ரூ.2 கோடியே 58 லட்சத்தில் சாயச் சாலைகள் அமைக்கப்படும்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் ரூ. 3 கோடியே 13 லட்சத்தில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்படும். இந்த இரு ஆலைகளிலும் ரூ.2 கோடியே 75 லட்சத்தில் கூடுதல் யந்திரங்கள் வாங்கப்படும்.

தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ. 32 கோடியே 76 லட்சத்து 72 ஆயிரம் வழங்கப்படும்.

கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் ரூ.2 கோடியே 35 லட்சத்தில் நவீன மயமாக்கப்படும். கோ–ஆப்டெக்ஸில் ரூ.20 லட்சத்தில் புதிய ஆடை ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *