செய்திகள்

தூய்மை இந்தியா திட்டம் நோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம்: 800 மாணவர்கள், 600 ஆசிரியர்கள் பங்கேற்றனர்

சென்னை, நவ. 18–
பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பாக தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நோய்த்தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை சார்பாக தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நோய்த்தடுப்பு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி, கல்வி நிறுவனங்கள், குடிசைப் பகுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சென்னை மாநகர் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள என்.கே.டி மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நோய்த் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சுமார் 800 மாணவியர்கள் மற்றும் 60 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். இதன் தொடக்கத்தில், சயன்ஸ் கிளப் மாணவிகள் வில்லுப்பாட்டு மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து நாடக வடிவில் நடித்துக் காட்டினர். சென்னை மாநகராட்சி சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் மாணவ சமுதாயத்தின் பங்கு, குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று வகைப்பிரித்து அளித்தலின் அவசியம், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கும் செய்யும் முறை, அதன் மூலம் குப்பைகள் அகற்றுவது மற்றும் பொது கழிப்பறை சம்பந்தமாக குறைகள் இருப்பின் எவ்வாறு புகைப்படம் எடுத்து பதிவேற்றும் செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டது.
மேலும், தொற்றுநோய்கள் உருவாகும் விதம், அவற்றை தடுக்கும் முறைகள், முறையாக 20 நொடிகள் தொடர்ந்து சோப்பு உபயோகித்து கைகழுவுவதனால் எவ்வாறு தொற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்து விளக்கப்பட்டு, செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் முறையாக கை கழுவினர். டெங்கு காய்ச்சலை பரப்ப காரணமாக இருக்கும் ஏடிஸ் ஈஜிப்டி வகை கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள், அதன் அறிகுறிகள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும் கொசுப்புழுக்களுடன் கண்காட்சியில் வைத்து விளக்கப்பட்டன. பின்னர், மாணவியர்கள் அனைவரையும் சென்னை மாநகராட்சியின் சுகாதார தூதர்களாக அறிவிக்கப்பட்டு, சுகாதார தூதர் அட்டைகள் வழங்கப்பட்டது. மாணவியர்கள் அனைவரும் நோய்த் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இம்முகாமில், சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் நேரு, கல்லூரி முதல்வர் எஸ்.சாமுண்டீஸ்வரி, தலைமையாசிரியர், எக்ஸ்நோரா கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர், துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *