செய்திகள்

தூக்கிட்டு தற்கொலை செய்த மருமகள்; மகன் சோகம் அறிந்து தாயும் தற்கொலை

மாமியார் மருமகள் சண்டையால் நடந்த பரிதாபம்

புதுச்சேரி, செப். 21–

மாமியார் – மருமகள் சண்டையில் மருமகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மனைவியின் பிரிவால் மகன் தற்கொலை செய்ய முயன்றதை அறிந்த, இளைஞனின் தாய் தற்கொலை செய்து கொண்டது நெஞ்சை உலுக்க வைத்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை, சன்னியாசிக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 29). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியை சேர்ந்தவர் சந்தியா (வயது 23), செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், இவர்களுடன் ஆனந்தின் தயார் அன்னக்கிளியும் வசித்து வந்துள்ளார். இதனால் மாமியார் – மருமகள் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படவே, இருவரையும் ஆனந்த் சமாதானம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில், மனமுடைந்து காணப்பட்ட சந்தியா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாமியாரும் தற்கொலை

காலையில் மனைவி பிணமாக கண்ணெதிரே தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த், தானும் அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அன்னக்கிளி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், மருமகள் இறந்த துக்கம், மகனின் தற்கொலை முயற்சியால் மனமுடைந்துபோன அன்னக்கிளி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உறவினர்கள், அன்னக்கிளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தற்கொலை செய்த சத்யா, அன்னக்கிளி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *