கடும் பனிப்பொழிவுக்கு நடுவில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமப்படும் மீட்புப் படை
துருக்கியில் 10 மாகாணங்களில் 3 மாதத்துக்கு அவசரநிலை பிரகடனம்
சன்லிர்ஃபா, பிப்.9–
துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,000ஐத் தாண்டியுள்ளது. கட்டட இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத காலத்துக்கு அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
இஸ்தான்புல், துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கி உள்ளது. இன்று (வியாழன்) காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 035 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியில் 12 ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவுக்கு நடுவில் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர். கட்டட இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை 20,000-மாக அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிரியாவுக்கு 6 டன் :
அத்தியாவசிய பொருட்கள்
சிரியாவின் மக்களுக்கு உதவும் வகை யில் 6 டன் அத்தியாவசியப் பொருட்களை அந்நாட்டு பிரதிநிதிகளிடம் இந்திய அரசு நேற்று ஒப்படைத்தது. இதற்காக சி-17 ரக ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு, இந்தியா நிவாரண பொருட்களை விமானத்தில் அனுப்புவது தெரிந்தும் பாகிஸ்தான் வான்வழியை கடந்து இந்திய விமானப்படை ஜம்போ விமானங்கள் துருக்கிசெல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை. இதனால் துருக்கிக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் இந்திய விமானப் படை விமானங்கள் ஈரானை சுற்றி செல்கின்றன.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் சாலைகள் வழியாக உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப இந்தியா விரும்பிய போதும், நீண்ட தாமதத்துக்குப்பின், ஆப்கானிஸ்தானிலிருந்து காலி லாரிகள் வந்து இந்தியாவிலிருந்து பொருட்கள் எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. இதனால் மனிதாபிமான உதவிகளுக்கு இந்தியாவின் செலவு இரட்டிப்பாகியது.
செஞ்சிலுவை சங்கம்
வேண்டுகோள்
சிரியா உள்நாட்டு போர் காரணமாக ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ளது. அதிபர் பஷர் அல் அசாத் அரசு மீது மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்நாட்டுக்கு சர்வதேச உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்க வேண்டும் என சிரியாவில் உள்ள செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு சிரியாவில் உள்ள பலபகுதிகள், உள்நாட்டு போர் காரணமாக ஏற்கெனவே சேதமடைந்தநிலையில் உள்ளன. சிரியா மற்றும்ரஷ்ய படைகளின் குண்டு வீச்சால், இங்கிருந்த வீடுகள், மருத்துவமனைகள் தரைமட்டமாகின. தற்போது இங்கு சேதம் மேலும் அதிகரித்துள்ளது. சிரியாவின் ஜன்டைரிஸ் நகரில் இடிபாடுகளை அகற்றுவதற்கு இயந்திரங்கள் இல்லாத தால், மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றுகின்றனர்.
மீட்க யாரும் இல்லை :
சிரியாவின் ஜன்டைரிஸ் நகரில் வசிக்கும் 60 வயது முதியவர் அலி பத்தல் கூறுகையில், ‘‘எனது குடும்பத்தினர் இந்த இடிந்த கட்டிடத்துக்கு கீழே உள்ளனர். அவர்களை மீட்க யாரும் இல்லை. அவர்களின் குரல்களை என்னால் கேட்க முடிகிறது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை மீட்க யாரும் இல்லை’’ என்று வேதனையோடு முறையிட்டார்.
சிரியாவின் அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ்மாகாணங்கள் முழுவதும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிரியாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.