செய்திகள்

துருக்கியில் 11,000 ஆண்டுக்கு முந்தைய உலகின் முதல் கோயில் கட்டுமானம்

அன்காரா, செப். 13–

மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில், 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம் அமைந்திருக்கிறது.

ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மித், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துருக்கிய மலை உச்சியை ஆய்வு செய்தபோது, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்கள் மிகவும் அசாதாரணமானவை, தனித்துவம் மிக்கவை என நம்பினார்.

உர்பா நகருக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு பீடபூமியின் மேல், “கோபெக்லி டெபே” என்று துருக்கியில் அழைக்கப்படும் மலை உச்சியில் 20 க்கும் மேற்பட்ட வட்டக் கல் அடைப்புகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் மிகப்பெரியது 20 மீ விட்டம் கொண்டதாக இருந்தது. அதன் மையத்தில் 5.5 மீ உயரமுள்ள இரண்டு செதுக்கப்பட்ட தூண்கள் நின்று கொண்டிருந்தன. ‘கோபெக்லி டெபே’ என்றால் பெருவயிறு மலை என்று துருக்கிய மொழியில் பொருள்.

முதல் கோயில்

செதுக்கப்பட்ட கல் தூண்கள் கைகள் கட்டப்பட்ட மனித உருவத்தைக் கொண்டிருந்தன. அவை 10 டன்வரை எடை கொண்டவை. அது விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத காலம். பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலம். அப்படியொரு காலத்தில் இத்தகைய பிரமாண்டமான கட்டுமானத்தை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியில் சவாலாக இருந்திருக்க வேண்டும்.

இந்த கட்டமைப்புகள் 11,000 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை. அவை தங்குவதற்காக அல்லாமல் பிற காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட மனிதகுலத்தின் பழமையான கட்டுமானமாகக் கருதப்படுகிறது. இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *