சென்னை, நவ. 23–
தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க.வின் இளைஞர் அணிச் செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சாரக்குழு செயலாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், துணைச் செயலாளர்களாக ஜோயல் உள்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வின் மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி சமீபத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 1–ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 1–ந்தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.