செய்திகள்

திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா

Spread the love

திருச்சியில்

மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா:

கலெக்டர் சிவராசு மாலை அணிவித்து மரியாதை

 

திருச்சி, மே.23–

மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,345 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருச்சியில் உள்ள ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் சு.சிவராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாட்டின் விடுதலைக்காகவும் சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தலைவர்ளின் நினைவினை போற்றிடும் வகையில் அவர்களது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் ஆண்டுதோறும் மே 23 ஆம் தேதி கொண்டாடப்படடுவது வழக்கம். 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திருச்சி மாநகரில் உள்ள பாரதிதாசன் சாலையில் முழுஉருவ வெண்கலச் சிலையை நிறுவி திறந்து வைத்தார். பிறகு 2002 ஆம் ஆண்டிலிருந்து இவரது பிறந்தநாள் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. முத்தரையர் சங்கத்தினர், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், பல்வேறு சங்கங்கள், திருச்சி மாவட்ட பிரமுகர்கள் பலரும் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக வந்து திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். காலை தொடங்கி இரவு வரையில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெறும். பொதுமுடக்கம் காரணமாக இந்தாண்டு விழாவுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

எனினும் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள மன்னர் பெரும்பிடு முத்தரையர் சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், திருச்சி கோட்டாட்சியர் எம்.எஸ். விஸ்வநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கார்த்திக் ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பொதுமுடக்கம் காரணமாக விமரிசையாக நடைபெறும் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *