செய்திகள்

திண்டுக்கல் மாவட்ட கண்மாய்களில் குடிமராமத்து பணிகள்; கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு

திண்டுக்கல், ஜூன்.23–

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிறுமலையாறு நீர்தேக்கம், பள்ளப்பட்டி கிராம் அகரம் கண்மாய் மற்றும் புலமாசி குளம், சேவுகம்பட்டி பெருமாள் கோவில் அணை ஆகியவற்றில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சிறுபாசன குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் சீரமைக்கும் பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும் தமிழக அரசால் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பயனீட்டாளர்கள் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு, அதன்படி கடந்த 2 ஆண்டுகளும் அதனை தொடர்ந்து நடப்பாண்டும் தமிழகம் முழுவதும் இப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 110 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்துள்ளன.

மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 2020-21-ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் பெரிய அய்யம்புள்ளியில் பாலாறு அணை கால்வாயில் ரூ.47 1/2 லட்சம் மதிப்பீட்டிலும், கொடைக்கானல் வட்டத்தில் ஏழுபள்ளம் குளத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டிலும் பழனி வட்டத்தில் கலையம்புதூர் அணை வரத்து கால்வாயில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத் திட்டத்திற்குட்பட்ட இடது கீழ்மட்டக் கால்வாய் மற்றும் இடது மேல்மட்டக் கால்வாய்களில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் நிலக்கோட்டை வட்டம் ஒருத்தட்டு கிராமத்திற்குட்பட்ட சிறுமலை அடிவாரத்தில் சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டிலும் நிலக்கோட்டை வட்டம் பள்ளப்பட்டி கிராமத்தில் அகரம்குளம் குளம் மற்றும் பலமாசி குளம் ஆகியவற்றில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும் திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் கோட்டுர் ஆவாரம்பட்டி தாமரைக்குளம் குளத்திற்கான வரத்துக் கால்வாயில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் வேடசந்தூர் வட்டத்தில் லட்சுமணம்பட்டி கிராமத்தில் லட்சுமணம்பட்டி அணைக்கட்டு மற்றும் கால்வாய் ஆகியவை ரூ.35 லட்சம் மதிப்பீட்டிலும் குஜிலியம்பாறை வட்டத்தில் ராமகிரி கிராமத்தில் உள்ள ராமகிரி குளத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் பழனி வட்டத்தில் எருமைநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டைகுளத்தில் உபரி நீர் மதகு மற்றும் உபரி நீர் தடுப்புகள் ஆகியவற்றில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலும் நிலக்கோட்டை வட்டத்தில் சேவுகம்பட்டி கிராமத்தில் பெருமாள்கோவில் அணைக்கட்டு பகுதியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 11 பணிகள் ரூ.5 1/2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 1519.777 எக்டர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிறுமலையாறு நீர்தேக்கம், பள்ளப்பட்டி கிராம் அகரம் கண்மாய் மற்றும் புலமாசி குளம், சேவுகம்பட்டி பெருமாள்கோவில் அணை ஆகியவற்றில் குடிமராமத்து மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் 3000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகள் பெறவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும் விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) கார்த்திக்கேயன், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், உதவி பொறியாளர் நீதிபதி, மோகன்தாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *