போஸ்டர் செய்தி

தாமிரபரணி மஹா புஷ்கர விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களோடு புனித நீராடினார் கவர்னர் பன்வாரிலால் புரோகித்

திருநெல்வேலி, அக். 11–

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மஹா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இவ்விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.

இம்மாதம் 22-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கரம் நடைபெறும். மூன்றரைக் கோடி தீர்த்தத்திற்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குரு பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் பன்னிரண்டு நாள்கள் பிரவேசம் செய்து வாசம் செய்வதாக நம்பிக்கை. அதன்படி குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதாலும், கிரகங்களின் அமைப்புப்படியும் 144 ஆண்டுகளுக்குப் பின்பு மஹா புஷ்கர விழாவாக தாமிரபரணியில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

பொதிகை மலை முதல் புன்னக்காயல் வரை 149 கி.மீ. பயணிக்கும் தாமிரபரணி நதியில் மொத்தம் 143 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அவற்றில் 64 தீர்த்தக்கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராடும் வகையில் உள்ளன. போக்குவரத்து வசதி, இயற்கையான சூழல் உள்ளிட்ட சில காரணங்களால் பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், கருப்பன்துறை, குறுக்குத்துறை, கைலாசபுரம் (தைப்பூச மண்டபம்), வண்ணார்பேட்டை, மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம் (ஜடாயு தீர்த்தம்), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட 18 தீர்த்தக்கட்டங்களில் புனித நீராடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தாமிரபரணி ஆற்றின் ராசியான விருச்சிக ராசிக்கு 12 வருடத்திற்கு ஒரு முறை குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். தற்போது விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி அடைந்ததையொட்டி தாமிரபரணி புஷ்கர விழா இன்று தொடங்கி வரும் 23–ந் தேதி வரை நடக்கிறது. நெல்லை இருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் மகா புஷ்கர விழா தொடங்கப்பட்டது.

இதே போல் அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசம் படித்துறையில் இன்று அதிகாலை தாமிரபரணி புஷ்கர விழா தொடங்கப்பட்டது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். சங்கராசாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், துறவியர்கள் கலந்து கொண்டு 108 புண்ணிய நதி கலச தீர்த்தங்களை தாமிரபரணி ஆற்றில் ஊற்றினர்.

மஹா கணபதி ஹோமம்

இதைத்தொடர்ந்து சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பாபநாசம், அம்பை, சேரன்மகாதேவி, சுத்தமல்லி, குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, தைப்பூச மண்டபம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.

பாபநாசத்தில் துறவியர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தாமிரபரணி மகா புஷ்கர விழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக தாமிரபரணி ஆற்றில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நீராடினார்.

இந்த மகா புஷ்கர விழாவை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை ரெயில் மூலம் தென்காசி ரெயில் நிலையத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

சங்கராச்சாரியர்கள், ஜீயர் சுவாமிகள்

பாபநாசம் தாமிரபரணி மகா புஷ்கரம் தீர்த்தமாடுதல் பெருவிழாவில் சங்கராச்சாரியர்கள், ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள், சதுக்கள், துறவியர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அகோரிகள் பூஜைகள் நடத்தினார்கள்.

மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கவர்னர் கலந்துகொண்டு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புஷ்கர விழாவில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்களும், துறவிகளும், மடாதிகளும் கலந்து கொண்டு புனித நீராட உள்ளனர். இதற்காக வடநாட்டில் இருந்து ஏராளமான சாமியார்கள் திருநெல்வேலிக்கு வந்து உள்ளனர். இந்த புஷ்கர விழாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆற்றில் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகா புஷ்கர விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *