செய்திகள்

தானியங்கி வாகனம் வடிவமைப்பு ஆராய்ச்சி: நியூயார்க் பல்கலைக்கழத்துடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Spread the love

வேலூர், ஜூலை 19–

தானியங்கி வாகனம் வடிவமைப்பு குறித்த ஆராய்ச்சிக்கு நியூயார்க் மாநில பிங்ஹம்டன் பல்கலைக்கழகத்துடன் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், பிங்ஹம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் தில்லான் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறியதாவது:–

விஐடி, நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் ( பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்) இணைந்து இந்தியாவில் தானியங்கி முறையில் (ஆளில்லாத) இயங்கும் வாகனங்களை வடிவமைப்பது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

இது தவிர விஐடி, பிங்ஹாம்டன் பல்கலைக்கழகமும் இணைந்து 5 ஆண்டுகளில் முதுகலை பட்டமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது விஐடி பல்கலைக்கழகத்தில் 3½ ஆண்டுகள் இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்கள், அடுத்த 1½ ஆண்டுகள் நியூயார்க் நகரிலுள்ள பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் படித்து 5 ஆண்டுகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

தற்போது இந்த முதுகலைப் பட்டம் பெற 4 ஆண்டுகள் இந்தியாவிலும், 2 ஆண்டுகள் அமெரிக்காவிலும் என 6 ஆண்டுகள் செலவிட வேண்டியுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு ஓராண்டு முன்பாகவே முதுகலை பட்டம் பெற முடியும். அத்துடன் வழக்கமான கல்விக் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தைப் பெறவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு நடப்பு கல்வி ஆண்டு (2019–-20) முதலே தொடங்குகிறது. விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள 13 துறைகளின் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர் என்றார்.

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், பேராசிரியர் ஸ்ரீஹரி, விஐடி பல்கலைக்கழக இயந்திரவியல் துறை தலைவர் வாசுதேவன், சர்வதேச உறவுகள் துறை துணை இயக்குநர் பிரிஜேஷ் நாயர் உள்ளிடோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *