வாழ்வியல்

தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படக் காரணமான ஆக்ஸிஜன் ஆராய்ச்சி

ஆக்ஸிஜன் பூமியில் உள்ள பெரும்பான்மை உயிரிகளுக்கு வாழ்வாதாரம் என்பது நாம் அறிந்ததே. உடலில் ஆக்ஸிஜன் இல்லையென்றால் உணவில் இருந்து நம்மால் ஆற்றலைப் பெற முடியாது; ஆக்ஸிஜன் குறையும்போது தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.

இதன் காரணமாக, ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் உடல் உடனடியாகச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை (Metabolic rate) மாற்றிக்கொள்கிறது. கூடுதலாக ஆக்ஸிஜனைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையும் உடல் செய்கிறது.

உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது, நம் சிறுநீரகத்துக்கு மேலிருக்கும் செல்களில் இருந்து ‘எரித்ரோபாய்டின்’ (Erythropoetin) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது கூடுதல் சிவப்பு அணுக்களை உற்பத்திசெய்யச் சொல்லி எலும்பு மஜ்ஜைக்குக் கட்டளையிடுகிறது.

இவற்றால் ஆக்ஸிஜனைச் சற்றுக் கூடுதலாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், இந்த ஆக்ஸிஜன் குறைவை உடல் எப்படிக் கண்டறிகிறது என்பது மிகப் பெரிய புதிராக இருந்தது. வளிமண்டலத்தில் ஒரு வாயுவின் அளவு குறையும்போது உடல் அதை உணர்ந்துகொள்ளும் வழிமுறைகள் என்ன, அதன் பின்னால் இருக்கும் உயிரியல், வேதியியல் நிகழ்வுகள் என்னென்ன என்பது போன்ற கேள்விகளுக்கு நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்துவந்தது.

மிகச் சிக்கலான ஒரு ஆய்வுக்குப் பின், எரித்ரோபாய்டின் சுரப்புக்கு ‘ஹைபாக்ஸியா இண்ட்யூஸ்டு ஃபேக்டர் -1ஆல்ஃபா’ (Hypoxia Induced Factor -1 alpha, சுருக்கமாக HIF-1⍺) என்ற புரதம் தூண்டுதலாக இருப்பதைக் கண்டறிந்தார்கள். இந்தப் புரதம் சிதைக்கப்பட்டால் எரித்ரோபாய்டின் சுரப்பதில்லை. இது சிதைக்கப்படுவதை ‘வான் ஹிப்பல் லிண்டா மரபணு’ (Von Hippel Lindau Gene) கட்டுப்படுத்துவதையும், அந்தச் சிதைத்தல் வினையில் ஆக்ஸிஜனுக்குப் பங்கிருப்பதையும் கண்டுபிடித்தார்கள்.

இந்தச் செயல்முறையைக் கண்டறிந்ததற்காக, கிரெக் எல். செமன்ஸா, வில்லியம் ஜி. கேலின் ஜூனியர், பீட்டர் ஜே. ராட்க்ளிஃப் ஆகிய மூவருக்கும் 2019-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆய்வு தொற்றுநோய் மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், செல் செயல்பாடு, புண் ஆறுதல் ஆகிய பல இடங்களில் பயன்படக்கூடியது. HIF-1 செயல்பாட்டைத் தூண்டுதல், செயல்பாட்டைக் கட்டுப்படுத்துதல் இரண்டுமே மருத்துவரீதியாக முக்கியமானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *