செய்திகள்

தமிழ் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி: கவர்னர் ரவி வாழ்த்து

சென்னை, ஏப்.14–

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ் புத்தாண்டு மற்றும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த இனிய, மகிழ்ச்சியான நாளில், தமிழ்நாட்டின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் வாழ்வில் வளம், அமைதி மற்றும் மகிழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் தமிழ் புத்தாண்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆண்டின் ‘சித்திரை’ மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. நமது பண்பாடு, மரபுகள் மற்றும் செழுமையான பாரம்பரிய அடையாளங்கள் ஆகியவற்றின் பெருமைகளைப் பறைசாற்றும் இந்த விழா, நமது இலக்குகளை நோக்கிய ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதுடன் ஒரு சிறந்த நாட்டினை உருவாக்குவதற்கான நமது உள்ளார்ந்த ஆர்வத்தினை நினைவூட்டுகிறது.

வாழ்வில் மகிழ்ச்சி

பகவான் மஹாவீரரின் அகிம்சை, அனைத்து உயிரினங்களிடமும் பரிவுடன் இருத்தல் போன்ற கொள்கைகள் மானுடவியலின் கண்ணியம், சமத்துவம் மற்றும் அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்துதல் ஆகியவற்றின் மாண்புகளை நமக்குக் கற்பிக்கிறது. உலகமே ஒரு குடும்பம் என்பதைக் குறிக்கும் ”வசுதைவ குடும்பகம்” என்பது நமது நாட்டின் கருப்பொருளாக உள்ளது.

இந்த மகிழ்வான தருணம், நமது விழுமியங்களின் மீதான நம்முடைய ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் மனித குலத்திற்கு இடையே நல்லிணக்கத்தைப் பரப்புவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இவ்விழாவானது, நமது மாநிலம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு நம்முடைய சிறப்பான பங்களிப்புடன் நம் வாழ்வில் மகிழ்ச்சி, உடல்நலன், அமைதி மற்றும் வெற்றியை வழங்கட்டும்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.