சென்னை, ஜூன் 21–
தென் தமிழ்நாட்டில் 22 முதல் 24 ந்தேதி வரை 3 நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு எல் நினோதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் எங்கெல்லாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்ததோ அங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கியது. மே மாதத்தின் இறுதியில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்திருந்தது. சென்னையில் ஜூன் தொடக்கத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் தணிந்து, பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்
வானிலை இப்படி மாறியிருக்கையில் நாளை மறுநாள் 22 ந்தேதி தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழ்நாட்டில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்டை விடுத்திருக்கிறது. அதேபோல நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று பொருள். 24 மணி நேரத்தில் 20.5 செ.மீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.