செய்திகள்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக 67 லட்சத்து 58 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருப்பு

சென்னை, பிப்.9-

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக இதுவரை 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு, கல்லூரிப்படிப்பை முடிப்பவர்கள் தங்களுடைய கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கத்தவறினாலும், அவர்களுக்கு 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டு, வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 31ந்தேதி வரையிலான நிலவரப்படி, வேலைவாய்ப்புக்காக எவ்வளவு பேர் பதிவு செய்திருக்கிறார்கள்? என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

* 31.1.2023ன் படி, வேலைவாய்ப்புக்காக 31 லட்சத்து 49 ஆயிரத்து 398 ஆண்களும், 36 லட்சத்து 9 ஆயிரத்து 27 பெண்களும், 273 திருநங்கைகளும் என மொத்தம் 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் பதிவு செய்திருக்கின்றனர்.

இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 481 பேர் மாற்றுத்திறனாளிகள்.

* இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 243 பேர், 19 வயது முதல் 30 வயதுடைய பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேர், 31 வயது முதல் 45 வயது வரை அரசுப்பணிக்காக காத்திருக்கும் வேலைதேடுபவர்கள் 18 லட்சத்து 31 ஆயிரத்து 930 பேர், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 734 பேர்.

* கல்வித்தகுதிகள் வாரியாக பதிவு செய்தவர்களை பார்க்கும்போது, 10-ம் வகுப்பை கல்வித்தகுதியாக கொண்டு பதிவு செய்தவர்கள் 50 லட்சத்து 82 ஆயிரத்து 712 பேர், பட்டதாரி ஆசிரியர்களாக 3 லட்சத்து 37 ஆயிரத்து 244 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 2 லட்சத்து 51 ஆயிரத்து 555 பேர் பதிவு செய்திருக்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டில் 67 லட்சத்து 61 ஆயிரத்து 363 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்து காத்திருந்ததாக புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன. அதனுடன் தற்போதைய புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில், பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை பார்க்கமுடிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *