நாடும் நடப்பும்

தமிழர் பாரம்பரியத்தால் சுற்றுலா பயணிகளை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் ஸ்டாலின்


ஆர்.முத்துக்குமார்


உலக வரலாறு இடிபாடுகளுக்கும் புராணங்களுக்கும் என்ற நிலைப்பாட்டில் தான் பலவற்றை அங்கீகரித்து அதன் நினைவுகளை கவுரவப்படுத்தி வருகிறோம். ஆனால் காப்பியங்களில் உள்ள உண்மையான வரலாற்று சிறப்பு மிக்க கலைகள், அதில் பங்கு பெறும் கதாபாத்திரங்கள் எல்லாமே ஏதோ கற்பனை கதைகளா? என்று நினைக்கும்படி விட்டுவிடுகிறது காலச் சக்கரத்தின் ஓட்டம்.

உதாரணத்திற்கு சிலப்பதிகாரம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்த வாழ்வியல், கலைகள், மாலை நேர மயக்கங்கள், சாமானியன் ஈடுபட்ட வீர விளையாட்டுகள், மன்னர்களின் வீரதீரம் என பலவற்றை சுட்டிக் காட்டுகிறது.

அப்படிப்பட்ட ஓர் அற்புத காவியத்தில் உள்ள பலர் பற்றிய குறிப்புகளை குறிப்பாக மதுரைக்கு அருகாமையில் வாழ்ந்த கவுந்தி அடிகள் தங்கிய வீடு இருந்த பகுதி இன்றும் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுவது உண்டு. சிலப்பதிகாரத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் பல பகுதிகள் இன்றும் சற்றே உருமாறி வழக்கில் இருப்பதை அறிஞர்கள் சுட்டிக் காட்டத்தான் செய்கிறார்கள்.

இது தஞ்சை, மதுரைக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சங்ககால பெருமைகள் ஆகும். அதைப்போல் பல ஆயிரம் ஆண்டு சிறப்புகள் அப்பகுதிகளில் மட்டுமின்றி இன்றைய தமிழகமெங்கும் இருப்பதை மறந்து விடக்கூடாது.


ராஜேந்திர சோழனால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுமான பாரம்பரியப் பெருமைமிகு கங்கைகொண்ட சோழபுரப் பிரகதீஸ்வரர் ஆலயம்.

‘இன்று’ என்ற காலக்கட்டத்தில் சங்க காலத்து சிறப்புகளால் சாமானியனுக்கு என்ன பயன்? என்று கேட்பதை விட அதை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்பது தான் அறிவார்ந்த சிந்தனையாக இருக்கும்.

சிலப்பதிகாரப் புகழ் பூம்புகார் என்ற பண்டைகால நவநாகரீக நகர் கடலுக்கடியே பல நூற்றாண்டுகளாக கால பெட்டகமாக காத்திருக்கிறது. அதை வெளிக்கொண்டு வர நிச்சயம் முடியும்! ‘டைட்டானிக்’ கப்பலை அகழ்வாய்வு செய்த அதே தொழில்நுட்பங்களால் செய்திட முடியும். ஆனால் அதற்கான செலவு நிச்சயம் பல ஆயிரம் கோடி ரூபாய்களாகவே இருக்கும்.

ஆகவே கீழடி முதலிய நிலப்பரப்பு அகழ்வாய்வுகளில் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள்.

அங்கு சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு அரும் பொருட்கள் பண்டைய தமிழரின் வாழ்வியல் சிறப்புகளை பறை சாற்றுகிறது.

இவையெல்லாம் வரும் காலத்தில் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வல்லமை கொண்டவை என்பதை மறந்து விடக்கூடாது.

தமிழகத்தின் சுற்றுலா பயணிகள் வருகையால் கிடைக்கும் வருவாய் ஆச்சரியமாய் அதிகமாகவே இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் விளம்பரச் செலவுகள் ஏதுமின்றி சென்னை உட்பட பல பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையால் வருமானம் கணிசமாகவே இருக்கிறது.

அதை மேலும் அதிகரிக்க விளம்பர முதலீடுகளும் அவசியமாகிறது. அந்த கண்ணோட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்திருப்பது நல்ல செய்தியாகும்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டடக்கலைகளின் அழகிய தொகுப்பாகவும் வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. அண்மையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர் ஸ்டாலின், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் கொரோனா பெரும்தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் இருப்பதால் அந்நிகழ்வு அடுத்த ஆண்டு முதல் மிகச்சிறப்பாகவே நடைபெறப் போகிறது. தமிழகத்தின் புதைந்து கிடைக்கும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உலகப் பார்வைக்கு பரிமாறப்பட்டு ரசிக்க வைக்கப் போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *