நாடும் நடப்பும்

தமிழக பாரம்பரிய பெருமைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்


ஆர் முத்துக்குமார்


தமிழகம் தமிழ் புத்தாண்டை கொண்டாடத் தயாராகி விட்ட இச்சமயத்தில் தமிழகத்தின் பாரம்பரிய பெருமைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையே!

நம்முடைய தனித்துவமான உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது மிகவும் அவசியம். ஏனென்றால், புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்படும் படிவத்தில், அந்த குறிப்பிட்ட பொருட்கள் எந்த ஊர் அல்லது வட்டாரம் அல்லது மாவட்டத்தில் உற்பத்தியாகிறது என்பது குறித்து குறிப்பிடப்படும்.

எனவே புவிசார் குறியீடு பெற்ற பிறகு எந்த வட்டாரப் பகுதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மட்டும்தான் அந்த பொருள் சம்பந்தப்பட்ட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விற்பனைகளில் ஈடுபட முடியும்.’

இதன் மூலம் ஒவ்வொரு உள்ளூர் உற்பத்தி பொருட்களின் எண்ணிக்கைகளும் உயர்கின்றன, இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வியாபாரம் பெருகி அவர்களின் பொருளாதாரச் சூழல் மேம்படுகிறது.

காஞ்சிபுரம் பட்டு புவிசார் குறியீடு பெற்ற பிறகு, பட்டு வாங்குவதற்காகவே காஞ்சிபுரம் செல்லும் குடும்பங்களை இன்று நம்மால் காணமுடிகிறது. அதேபோல் கோவில்பட்டி மிட்டாய் என்று பெயரிட்டு அனைத்து ஊர்களிலும் உற்பத்தி செய்துகொண்டிருந்தார்கள். இரு வாரம் முன்பு தமிழ்நாட்டின் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்கிடிச்சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவல்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, உடன்குடி பனம் கற்கண்டு, சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உட்பட 45 உணவு வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள், தூத்துக்குடி ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .

இதனால் பூவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்பாளர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் பதினைந்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது.

இந்த நிலையில் புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி குறித்து உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தை மையமாகக் கொண்டு சுமார் 200 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்து வருகின்றனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு மானாவரி பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.

சேலத்தில் தான் இந்தியாவிலேயே 95% ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஐந்து சதவீத ஜவ்வரிசி ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த ஜவ்வரிசி தேவையை சேலம் பூர்த்தி செய்து வருகிறது என்பது தமிழகத்திற்கு பெருமை. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக மத்திய அரசு தற்போது புவிசார் குறியீடு வழங்கி சேலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இதனால் ஜவ்வரிசி உற்பத்தியும் வணிகமும் அதிகரிக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் தெரிந்த சேலம் ஜவ்வரிசி இனி உலக அளவில் பிரபலமாகும். மேலும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஜவ்வரிசி உணவுப் பொருளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கை மத்திய மாநில அரசுகள் அளித்து இந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்று ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி வர்க்கி (Ooty varkey) என்பது கோதுமை மாவு, அரிசி, ரவை, தண்ணீர், நெய், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றால் செய்யப்படும் ஒரு வகை பிஸ்கட் ஆகும்.

ஊட்டி வர்க்கியில் விலங்குகளின் கொழுப்பு இல்லை. ஊட்டியில் 90–க்கும் மேற்பட்ட வர்கி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களில் யாரும் விலங்குகளின் கொழுப்பை வர்க்கி உற்பத்தியில் பயன்படுத்துவதில்லை என்பதும் இதன் சிறப்பாகும்.

வெள்ளையர்கள் ஆட்சி காலத்திலேயே ஊட்டி வர்க்கி பிரபலமானது, இது எப்படி, ஆனால் எப்போது வந்தது அதை ஏன் வர்கி என்று அழைக்க ஆரம்பித்தனர் என்பது இன்றும் தொடரும் புதிர்தான்!

இந்தியாவுடைய வளர்ச்சிக்கு கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம். குறிப்பாக கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது. அதை உறுதி செய்கிறது புவிசார் குறியீடு.

காஞ்சிபுரம் பட்டு என்றால் முன்பு எங்கு வேண்டுமானாலும் சென்று மக்கள் வாங்கி கொண்டிருந்தனர். ஆனால் புவிசார் குறியீடு பெற்ற பிறகு, பட்டு வாங்குவதற்காகவே காஞ்சிபுரம் செல்லும் குடும்பங்களை இன்று நம்மால் காணமுடிகிறது. அதேபோல் கோவில்பட்டி மிட்டாய் என்று பெயரிட்டு அனைத்து ஊர்களிலும் உற்பத்தி செய்துகொண்டிருந்தார்கள்.

தற்போது புவிசார் குறியீடு பெற்ற பிறகு அப்படி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகிறது. இதன்மூலம் கோவில்பட்டியில் கடலைமிட்டாய் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பலன் கிடைக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான கைவினை மற்றும் கைத்தறி பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கிவிட்டோம். ஆனால் இன்னும் தனித்துவமான வேளாண் மற்றும் இயற்கை பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் மீதம் இருக்கின்றன. இனி அவற்றுக்கு புவிசார் குறியீடு வாங்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்.

இந்தியாவுடைய வளர்ச்சிக்கு கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம். குறிப்பாக கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது. இது கிராமங்களின் வளர்ச்சியை உயர்த்துவதோடு மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு அளவுகோல். அதில் தமிழகம் முன்னனியில் இருப்பது பெருமையை நமக்கெல்லாம் பெருமையே.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *