செய்திகள்

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு

சென்னை, செப்.17-

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் நீட் தேர்வு, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு, இருமொழிக் கொள்கை போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

நீட் விவாதத்தின்போது ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் காரசார மோதல் ஏற்பட்டது. இறுதியில் சபாநாயகரின் உத்தரவையடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 15-ந் தேதி அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

நீட் விவகாரத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் கிளப்பி பேசினார். அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதில் அளித்தார்.

நீட் தேர்வு கொண்டு வந்ததே மத்திய காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி தான். 13 மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் தி.மு.க. தான் என்று முதலமைச்சர் ஆவேசமாக கூறினார்.

இருமொழிக் கொள்கையில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்கள் அனைத்தும், சட்ட மசோதா மூலம் நிறைவேற்றப்பட்டன. அந்த வகையில் இந்த 3 நாட்கள் கூட்டத் தொடரில் 24 சட்ட மசோதாக்கள் நிறைவேறின. நேற்று மட்டும் 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டசபையின் அனைத்து அலுவல்களும் நிறைவேறிய நிலையில் சபாநாயகர் ப.தனபால், “இக்கட்டான காலகட்டத்திலும் சட்டசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் தலைமைச் செயலாளர் தனிக்கவனம் செலுத்தி சிறப்பாக பணியாற்றினார்.

சட்டசபை செயலாளர், அரசுப் பொறியாளர்கள் உள்பட பலரும் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சட்டசபையை மீண்டும் கூடும் தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *