செய்திகள்

‘‘தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இனி வரவே வராது: அமைச்சர் பி.தங்கமணி உறுதி

Spread the love

சென்னை, ஜூலை.5-

‘‘தமிழகத்தில் இனி, மின் தட்டுப்பாடு வரவே வராது’’ என அமைச்சர் தங்கமணி சட்டசபையில் திட்டவட்டமாக கூறினார்.

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் மின் திட்டப்பணிகளால் அடுத்த 4 ஆண்டுகளில் 6,200 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

சட்டசபையில் எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘நாட்டின் நிலை வளர்ச்சி, தொழிற் துறை மேம்பாட்டுக்கும், வேலை வாய்ப்பும் உருவாக 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் அவசியமாகும்.

தமிழக அரசு மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 800 மெகாவாட் அளவுக்கு மின் தேவையின் அளவு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகரில் மட்டும் 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 13,995 மெகாவாட் மின்சாரம் மாநில மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. இந்த நிலை தக்கவைக்கப்படும். எனவே மின் தட்டுப்பாடு இங்கு வரவே வராது.

24 மணிநேரத்தில் ஒரு நிமிடம் மின்சாரம் தடைபட்டாலும், என்ன நடந்தது என்பது தெரியாமல் மக்கள் கோபப்படுகின்றனர். மின் கடத்தி, இன்சுலேட்டர் போன்றவற்றில் சிறு கீறல் விழுந்தால்கூட அது உடனடியாகத் தெரியாது. அப்படிப்பட்ட பழுதை சரிசெய்யத்தான் காலதாமதம் ஏற்படுகிறதே தவிர, அது மின் தடையல்ல.

கோடைகாலத்தில் சில நாட்களில் பல்வேறு பகுதிகளில் இயற்கை சீற்றத்தின் காரணமாக, மின் தடை ஏற்பட்டது. அதை சீர் செய்ய இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் ஆகிவிடுகிறது. இதை அரசியலாக்கி, மின்வெட்டு என்று தவறான பிரச்சாரத்தை செய்து விடுகிறார்கள். மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு புதிதாக துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் போன்றவற்றை நிறுவுவதற்கு அந்தந்தப் பகுதியில் பொது மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் எதிர்காலத்தில் தடையில்லாமல் மின்சாரத்தை கொடுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

தமிழகத்தின் மின்சாரத் தேவை 15 ஆயிரத்து 600 முதல் 16 ஆயிரம் மெகாவாட் ஆக உள்ளது.

மின்சாரம் இருந்தால்கூட அதை சீராக அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கு துணை மின்நிலையங்கள் தேவை. கடந்த 9 ஆண்டுகளில் 507 புதிய துணை மின்நிலையங்களை அமைத்திருக்கிறோம்.சென்னையில் மட்டும் 21 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான் கடுமையான வெயில் காலத்திலும் மின்வெட்டு இல்லை.

சென்னையின் மின்சாரத் தேவை மட்டும் 3,738 மெகாவாட் ஆகும். ஆனால் கேரள மாநிலத்தின் மின்சாரத் தேவையே 3 ஆயிரம் மெகாவாட்தான். அந்த அளவுக்கு சென்னையில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 40 துணை மின்நிலையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

76 லட்சம் குடும்பங்களுக்கு மின் கட்டணம் இல்லை

தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் வரைக்கும் பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 76 லட்சமாகும். அவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

வடசென்னை அனல் மின் திட்டம், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் தி்ட்டம், உடன்குடி, உப்பூர், குந்தா நீரேற்று மின் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான மின்சாரத் திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு 6,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இத்திட்டங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் நிறைவடையும்.

மேலும், எண்ணூர், உடன்குடி விரிவாக்கத் திட்டம், செய்யூர் அனல்மின்திட்டம், சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம், கடலாடி உட்பட மொத்தம் 11,650 மெகா வாட் அளவுக்கு மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.மேலும், 800 மெகாவாட் மின்சாரம் கொண்டு வருவதில் மராட்டிய மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா வரை மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. அங்கிருந்து மின்சாரத்தை கொண்டுவர தமிழகத்தில் பூமிக்கு அடியில் புதைவடம் அமைக்கக் கூறுகிறார்கள். கம்பம் அமைக்க இடம் கிடைப்பதில்லை. இதில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகத்தில் 2028–29ம் ஆண்டுக்குள் 11 ஆயிரத்து 356 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின்சாரத்தின் விலையில் மத்திய அரசு கூடுதலாக 44 பைசா உயர்த்தியது உள்ளிட்ட சில காரணங்களுக்காக மின்சார வாரியத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *