செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

சென்னை, ஜூன்.10-

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவசர செய்தி அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரம், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மத்திய அரசிடம், 1.01 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெறப்பட்டு, 98 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் இருந்த 12,000 தடுப்பூசிகள் நேற்று மாலைக்குள் செலுத்தப்பட்டன. நேற்று பெரும்பான்மையான இடங்களில் தடுப்பூசி போடப்படவில்லை.

இதனிடையே, மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியிருந்த தடுப்பூசிகளை அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அவையும் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால், அவற்றின் வருகைக்காக தமிழகம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு தமிழக அரசிடம் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால், இன்று தடுப்பூசி வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

ஏற்கனவே மத்திய அரசு நேற்று 63 ஆயிரத்து 370 ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், இன்று 40 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த தடுப்பூசி மருந்துகள் வந்து சேரவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) 3 லட்சத்து 65 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்புவதாக தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தமிழக அரசால் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் சூழ்நிலையிலும் தற்போது தடுப்பூசி கையிருப்பில் இல்லை.

எனவே உடனடியாக இன்று (வியாழக்கிழமை) தேவையான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசுக்கு அவசர செய்தி அனுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *