செய்திகள்

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள்

மதுரை, மார்ச். 1–

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தினமணி தியேட்டர் அருகே கழக மாணவரணி செயலாளரும் இணைச் செயலாளருமான குமார் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான முனைவர் எஸ்.எஸ்.சரவணன், கழக இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை நகர் மற்றும் கிளைகள் சார்பில் கொண்டாடி வருகிறோம்.

மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் மதுரையில் இருக்கும் 100 வார்டுகளிலும் கழகக் கொடியை ஏற்றி ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. அன்று அனைத்து வார்டுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அன்று மாலை அனைத்து நிர்வாகிகள் வீட்டிலும் தீபம் ஏற்றி வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய சபதம் ஏற்றுக் கொண்டனர்.

ஒரு தலைவருக்கு பிறந்தநாள் விழா ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு கிராமங்களிலும் கொண்டாடுவது அண்ணா தி.மு.க. மட்டுமே. ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களை வகுத்து அவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

ஏழைகள் குடும்பத்தில் வாழும் குழந்தைகள் இன்று நல்ல கல்வி கற்று வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆட்சியில் தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, தொட்டில் குழந்தை திட்டம், குழந்தை பாதுகாப்பு பெட்டகம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள், மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்கள், விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி என்று பல எண்ணற்ற திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்காக ஜெயலலிதாவின் ஆட்சி தொன்றுதொட்டு செய்து வருகிறது.

இந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் கொண்டு வந்ததும் ஜெயலலிதாவின் ஆட்சி தான். தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் வருகிறது-? எப்போது போகிறது? என்று யாருக்கும் தெரியாது. இது நீங்கள் அறிந்த உண்மையே. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தடையில்லாத மின்சாரம் கொடுக்க முடியாது.

ஒரு ரூபாய் இட்லி

உலகத்திலேயே ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்தது ஜெயலலிதாவின் ஆட்சி தான். கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று அனைத்துப் பகுதி மக்களுக்கும் காய்கறி தொகுப்பு பையினை கொடுத்து அன்று பசியில்லாமல் வாழ வைத்ததும் ஜெயலலிதாவின் ஆட்சி தான்.

கொரோனா காலத்தில் தி.மு.க.வினர் யாருமே வெளியே வந்து பொதுமக்களைச் சந்திக்க வரவில்லை. இன்று தேர்தல் வந்தவுடன் வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். ஒரு லட்சம் பேருக்கு மாடு, செம்மறி ஆடு, கொடுத்ததும் ஜெயலலிதாவின் ஆட்சி தான்.

மதுரையில் தடையில்லாத குடிநீர் சுத்தமான குடிநீர் கொண்டு வர இருப்பதும் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான். 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மதுரை தெப்பக்குளம் நிறைந்து காணப்படுகிறது. மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததும் ஜெயலலிதாவின் ஆட்சியே. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், பகுதி செயலாளர்கள் மாரிசாமி, அண்ணா நகர் முருகன், ஜெயவேல், கருப்புசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி, கண்ணகி பாஸ்கரன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுகந்தி அசோக், ஏராளமான அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *