செய்திகள்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பூஜ்ஜியமான புதிய கொரோனா பாதிப்பு

சென்னை, மார்ச்.10-

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 41 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 81 ஆண்கள், 66 பெண்கள் என மொத்தம் 147 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேரும், கோவையில் 17 பேரும், செங்கல்பட்டில் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக காஞ்சீபுரம், வேலூரில் தலா 7 பேரும், நீலகிரியில் 6 பேரும், கன்னியாகுமாரி, திருவள்ளூரில் தலா 5 பேரும் உள்பட 35 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அரியலூர், கடலூர் உள்பட 11 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேபோல் அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சிகிச்சையில் இருந்து அனைவரும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது இந்த 2 மாவட்டங்களும் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

இதில் 12 வயதுக்கு உட்பட்ட 26 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 27 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 51 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 296 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 116 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 57 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, தேனியில் தலா ஒருவர் உயிரிழந்தனர். 36 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 21 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 387 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

சிகிச்சையில் ஆயிரத்து 903 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.