போஸ்டர் செய்தி

தபால்துறை தேர்வு விவகாரம்: பாராளுமன்ற இரு அவைகளிலும் அண்ணா தி.மு.க. குரல் கொடுக்கும்

Spread the love

சென்னை, ஜூலை 15–

சட்டசபையில் தபால் துறை தேர்வு விவகாரம் தொடர்பாக பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் அண்ணா தி.மு.க. குரல் கொடுக்கும் என்றும், மத்திய அரசின் பதிலை அறிந்து கொண்டு அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

எதாவது காரணத்தை தேடி அதையே சாக்காக வைத்து தி.மு.க. அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும், உங்களைவிட எங்களுக்கு 100 மடங்கு உணர்வு உள்ளது என்றும் முதல்வர் காட்டமாக பேசினார்.

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு பிரச்சினை எழுப்பினார். அது தொடர்பாக அவர் பேசும்போது, தபால் துறை தேர்வுகள் முன்பு ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் பாரதீய ஜனதா அரசு ஜூலை மாதம் மாற்றத்தை செய்துள்ளது. தபால் துறை தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என அறிவித்துள்ளது. இது தமிழகத்தின் உரிமையை தட்டிப் பறிக்கும் செயல் ஆகும். தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதா அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. இதை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த பிரச்சினை குறித்து அவையில் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும். தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் வகையில் தீர்மானம் ஒன்றை இந்த மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இருமொழி கொள்கையை அரசு பின்பற்றும்

அதற்கு மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளிக்கையில், தபால் துறை தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்டது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இடம் பெற்றதாக உறுப்பினர் தெரிவித்துள்ளார். முதல் தாளை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. அதில் தமிழ் இடம் பெற்றுள்ளது. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் வகையில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் 2 கட்டுரைகளும் தமிழில் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தாள் 2–ல் தான் பிரச்சினை.

அம்மாவின் அரசு எப்போதுமே இருமொழி கொள்கையை தான் பின்பற்றும். ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்காது. தேர்வு தொடர்பாக மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தும். நாம் இருவருக்கும் மொழி விஷயத்தில் ஒரே கொள்கை தான். இருமொழி கொள்கையில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுகையில், இரண்டு பேருமே இருமொழி கொள்கைக்கு ஆதரவாகதான் இருக்கிறோம். அதில் மாற்று கருத்து இல்லை. தபால் துறை தேர்வு தொடர்பாக மத்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், இருமொழி கொள்கையில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. பாராளுமன்றம் தான் பவுர்புல். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுங்கள் என்றார்.

அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில், பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதில் பிரச்சினையில் இல்லை. தபால்துறை தேர்வு தொடர்பாக தீர்மானம் கொண்டு வர வேண்டியது தானே? அதை தானே கேட்கிறோம்.

அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் அவர்கள் குரல் கொடுத்ததால், சபையில் அமளி நிலவியது. அதற்கு சபாநாயகர் தனபால், தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் எழுப்பிய பிரச்சினைக்கு அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். அதோடு பிரச்சினை முடிந்துவிட்டது என்றார்.

அதை தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து பேசுகையில், தங்கம் தென்னரசு ஒரு முக்கிய பிரச்சினையை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதற்கு அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.மொழி விஷயத்தில் எங்களுக்கும், அரசுக்கும் ஒரே கொள்கை தான். மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதில் என்ன நஷ்டம் ஏற்பட போகிறது. இருமொழி கொள்கைக்கு நீங்களும் ஆதரவு, நாங்களும் ஆதரவாக இருக்கிறோம். தீர்மானம் ஏன் கொண்டு வரக்கூடாது. இதற்கு தெளிவான பதில் வேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்படும்

அதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், தபால் துறை தேர்வை தமிழில் எழுத முடியாத நிலை பற்றி பாராளுமன்றத்தில் நாளை எழுப்பப்படும். அது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவை அறிவிக்கிறது என்பதை பார்த்து விட்டு அதன் பிறகு ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து முடிவை எடுப்போம் என்றார்.

அப்போது துரைமுருகன் பேசுகையில், பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கும்போது, அவை ஒத்திவைக்கப்பட்டுவிடும். எனவே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், துணை முதலமைச்சர் தெளிவாக சொன்னார், மீன்வளத் துறை அமைச்சரும் தெளிவாக சொன்னார். இந்த உத்தரவை போட்டது மத்திய அரசாங்கம். மத்திய அரசாங்கத்திலே வாதாடக் கூடிய ஒரு வாய்ப்பை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தந்திருக்கின்றார்கள். அங்கே வாதாடுவதிலே என்ன தவறு. அதுமட்டுமல்ல, அங்கே அந்தப் பிரச்சனையை எழுப்புகின்ற போது தான், என்ன பதில் கிடைக்கும் என்பது நமக்கு தெளிவாக தெரியும். ஆகவே, தெளிவாக தெரிந்த பிறகு ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அந்த அடிப்படையிலே தான், துணை முதலமைச்சர் அந்த கருத்தை தெரிவித்தார் என்றார்.

அதை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, ஒரு பிரச்சினை எழுப்பும்போது, அதற்கு பதில் அளிக்கும்போது, என்ன பதில் அளிக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டு பேச வேண்டும். பதில் அளிக்கும்போது இப்படி குறுக்கீடு செய்யக்கூடாது. தொடர்ந்து இப்படி பேசுவது எப்படி சரியாக இருக்கும் என்றார்.

அதை தொடர்ந்து சபாநாயகர் தனபால் பேசும்போது, தி.மு.க. உறுப்பினர் அவையின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என கேட்டார். அதற்கு அனுமதி அளித்து பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கு அமைச்சரும், துணை முதலமைச்சரும் பதில் அளித்துவிட்டார்கள். எல்லோரும் பேச வேண்டும் என்று கேட்டால் எப்படி அனுமதி வழங்குவது. முன் வரிசையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. முதல்வர், துணை முதல்வர் பேசும்போது குறுக்கிடுவது சரியில்லை. உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்கு அரசு உரிய பதிலை அளித்து விட்டது என்றார்.

அதைத்தொடர்ந்து துரைமுருகன் பேசும்போது, இருவருக்குமே இந்த விஷயத்தில் ஒரே கொள்கை தான் இருக்கிறது. இந்தியை திணிக்க கூடாது என்பது எங்களது ரத்தத்தில் கலந்த பிரச்சினை. இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்க எங்களுக்கு அனைத்து உரிமை உண்டு. ஆனால் எங்கள் உணர்வை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியதால், நாங்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

அதை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீங்கள் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். எப்படியாவது இந்த அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலே இருந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எங்களை பொறுத்தவரைக்கும், உங்களுக்கு என்ன உணர்வு இருக்கின்றதோ, அதே உணர்வு எங்களிடத்தும் இருக்கின்றது. ஆகவே, அந்த உணர்வின் அடிப்படையிலே, நீங்கள் ஒரு காலத்திலே சொன்னீர்கள், 37 பேர் இருந்து என்ன சாதித்தீர்கள் என்று எங்களை கேட்டீர்கள். மத்தியிலே பிரச்சனை வருகின்றபோது, அண்ணா தி.மு.க.விலிருந்து 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திலே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டீர்களே என்ன சாதனை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினீர்களே, அதே கேள்வியைத் தான் நாங்களும் எழுப்புகின்றோம். நீங்கள் 37 பேர் வெற்றி பெற்று மக்கள் உங்களை அனுப்பி இருக்கிறார்கள். எதற்காக? மத்தியிலே ஒரு பிரச்சனை வருகின்றபோது, அந்த பிரச்சனையை நாடாளுமன்றத்திலே எழுப்பி அதை தீர்வு காண்பதற்கு தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள். ஆகவே, அங்கே குரல் கொடுக்கின்றபோது, நீங்களும் குரல் கொடுங்கள், நாங்களும் குரல் கொடுக்கின்றோம். அப்பொழுது என்ன பதில் வருகின்றது என்பதை தெரிந்து, அதற்கு ஏற்றவாறு நாம் நம்முடைய அவையிலே ஒரு நல்ல முடிவை எடுக்கலாம் என்பதை தான் துணை முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார். அதில் என்ன வேறுபாடு இருக்கிறது? ஆகவே, நீங்கள் பொறுக்க மாட்டீர்களா?

நீங்கள் எப்படி உணர்வுபூர்வமாக இதை அணுகுகின்றீர்களோ, அதே உணர்வுபூர்வமாக நாங்களும் அணுகுகின்றோம். நல்ல தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான், இந்த செய்தியை சொல்லுகின்றேன். ஆகவே, மத்தியிலிருந்து நமக்கு இருக்கின்ற கருத்துக்கு என்ன கருத்து தெரிவித்தார் என்ற அடிப்படையை தெரிந்து, இங்கே அந்த பிரச்சனையை தீர்த்தால் நன்றாக இருக்கும் என்றார்.

அதை தொடர்ந்து ஜெயக்குமார் பதில் அளிக்கையில், இருமொழி கொள்கை விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் இந்த விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். ஆனால் தி.மு.க.வோ போகாத ஊருக்கு வழி சொல்கிறார்கள். அதனால் தான் திட்டமிட்டு தி.மு.க. இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறது. அதனால் தான் வெளிநடப்பு செய்தாார்கள்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர். ராமசாமி பேசுகையில், தபால் துறை தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.

அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் உறுப்பினர்களை பார்த்து, இரு மொழி கொள்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என அறிவிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தயாரா? தமிழிகத்திலிருந்து தேர்ந்தெடுத்துள்ள எம்.பி.க்கள். இரு மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். அதை தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் அபிபக்கர் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தார்.

அதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், தபால் துறை தேர்வில் தமிழ் இடம்பெறாததது தொடர்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர் தெளிவாக பதில் அளித்து விட்டனர். மத்திய அரசின் நிலையை அறிந்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

தபால் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் தி.மு.க.வால் 24 மணி நேரம் கூட பொறுத்தக்கொள்ள முடியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது அவர்களது நோக்கம். நீட் தேர்வாக இருந்தாலும், ஹைட்ரோ கார்ப்பன் என்றாலும், எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். தி.மு.க.வின் நோக்கம் தமிழர்களின் நலனை பாதுகாக்கும் விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என்பது அல்ல. மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கு இடையே சிக்கலை உருவாக்கி அதில் குளிர் காய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறாது. ஆனால் 5 ஆண்டுகளும் அம்மாவின் ஆட்சி நிலைத்திருக்கும். தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை அரசு கடுமையாக எதிர்க்கும் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *