செய்திகள்

தனியார் பள்ளிகள் 2 கட்டங்களாக கட்டணம் வசூலிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை, ஜூலை.8-

தனியார் பள்ளிகள் 2 கட்டங்களாக 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வலியுறுத்துவதாக பல்வேறு புகார்கள் கல்வித்துறைக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. இதையடுத்து தனியார் பள்ளிகள் 75 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த 75 சதவீத கல்விக் கட்டணத்தை எவ்வாறு வசூலிக்க வேண்டும் என்பதற்கான உத்தரவை தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் பிறப்பித்துள்ளார்.

அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக பள்ளிகள் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் மீண்டும் மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் இதுவரை தொடங்கப்படாமலே இருக்கின்றன. 2021–22ம் கல்வியாண்டுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இயக்குனரகங்களால் பல்வேறு மனுக்கள் பெறப்படுகின்றன.

இந்த நிலையில் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உதவிபெறாத தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அறிவுறுத்தப்படுகின்றன. இதில் முதல் தவணையாக 40 சதவீதத்தை 31.8.2021-க்குள் வசூலித்துக் கொள்ளலாம். அடுத்த 35 சதவீதத்தை 2021–22ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கிய 2 மாதங்களில் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீதத்தை தொற்றைக் கருத்தில்கொண்டு, சரியான நேரத்தில் முடிவு செய்யப்படலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *