செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தி.மு.க. தவறான அறிக்கை: நாடாளுமன்ற பேச்சில் ரவீந்தரநாத்குமார் புகார்

புதுடெல்லி, ஜூன்.27–

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்தரநாத்குமார் நேற்று (26–ந் தேதி) நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக புகார் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:–

தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினை குறித்து எடுத்துக்கூற எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. இங்குள்ள சில தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு மாநில அரசு தான் காரணம் என்பது போல் சில பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். பருவ மழை பொய்த்ததும், முக்கிய நீர் ஆதாரங்கள் வறண்டு போனதும் தான் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.

தி.மு.க உறுப்பினர்கள் தவறான அறிக்கைகளையும், குற்றச்சாட்டுகளையும் இங்கு தெரிவிக்கின்றனர். நான் தமிழக அரசின் ஒரே ஒரு பிரதிநிதியாக இங்கு உள்ளேன். ஆனால், அவர்கள் 37 பேர் உறுப்பினர்களாக இங்கு உள்ளனர்.

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சரியான பட்டியலை நான் வைத்துள்ளேன். அவர்கள் விரும்பினால் அதனை அவர்களுக்கு நான் வழங்குகிறேன். அவர்கள் விரும்பினால் அவர்களது ஊடகத்தில் இதனை வெளியிடலாம். இப்பட்டியலை மறைக்காமல் அவர்களது ஊடகத்தில் வெளியிடவேண்டும் என நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் தயவுசெய்து எனக்கு நேரம் வழங்கினால் நான் தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த அவைக்கு தெரிவிக்க முடியும்’’.

இவ்வாறு ப.ரவீந்தரநாத்குமார் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *