செய்திகள்

தடை உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள்: கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிய இன்ஸ்பெக்டர்

Spread the love

சென்னை, மார்ச் 25–

சென்னையில் தடை உத்தரவை மீறி சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் கையெடுத்து கும்பிட்டு திரும்பி அனுப்பி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பலரும் வெளியே வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்கு ஒவ்வொரு மாநில காவல்துறையும் ஒவ்வொரு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வெளியே வரும் வாகன ஓட்டிகளை, காவல்துறையினர் தடியடி நடத்தி வீட்டுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

உத்தரகண்டில், நான் சமூக விரோதி என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கையில் கொடுத்து காவல்துறையினர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகனத்தில் வருபவர்களை விசாரணை நடத்தி தேவையில்லாமல் சுற்றி வருபவர்களை திருப்பி அனுப்பினர்.சென்னைக்குள் நுழையும் வாகனங்களை தடுக்க, எல்லைகளில் 8 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு மீறலை கண்காணிக்க 30 பறக்கும் படைகளும், 400 ரோந்து வாகனங்களும் நேற்று இரவு சென்னை முழுக்க வலம்வந்தன.

முதல்நாள் என்பதால், எச்சரித்து அனுப்பிய போலீசார், இனிமேல், தடை உத்தரவை மீறினால், கடுமையான நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர். அத்யாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள் உரிய அடையாள அட்டை அல்லது அனுமதிக் கடிதம் பெற்று பயணிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கையெடுத்து கும்பிட்ட காவல் ஆய்வாளர்

இந்த நிலையில், சென்னை ஸ்பென்சர் பிளாசா அமைந்திருக்கும் அண்ணா சாலை சந்திப்பில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ரஷீத், வாகன ஓட்டிகளைக் கையெடுத்துக் கும்பிட்டு, வீட்டில் இருங்கள். வெளியே வராதீர்கள், வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமல்லவா? என்று கையெடுத்துக் கும்பிட்டவாறு வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பி வைத்தார்.

இதை பல இருசக்கர வாகன ஓட்டிகளும் கேட்டு தலையாட்டியபடியே சென்றனர். காரில் சென்றவர்களும் தாங்கள் ஏன் செல்கிறோம் என்பதை விளக்கினர். அப்போது திடீரென ஒரு இளைஞர், காவல் ஆய்வாளரின் காலில் விழுந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சென்றது, வாகன ஓட்டிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *