செய்திகள்

தஞ்சாவூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 5 பேர் கைது

தஞ்சாவூர், ஏப். 29–

தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டியில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை அருகே உள்ள குலுங்குளம் சோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து கடையில் இருந்து தஞ்சை புது பஸ்நிலையம் நோக்கி நடத்தி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அருகில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கொடியரசன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று இளம்பெண்ணை மறித்து பேசினார். ஏற்கனவே அறிமுகமான இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் மோட்டார் சைக்கிளில் ஏறு என கூறியுள்ளார்.

இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததார். இதனால் அவரது செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டினார். இதனால் பயந்து போன இளம்பெண் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். பின்னர் இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்லும் வழியில் மேட்டுப்பட்டியை தாண்டியதும் கொடியரசன் மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதிக்கு திருப்பி உள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் சத்தம் போட்டுள்ளார்.

இருப்பினும் கொடியரசன் வலுக்கட்டாயமாக அங்குள்ள முந்திரி காட்டுக்கு இளம்பெண்ணை கடத்திச்சென்றார். அங்கு கொடியரசனின் நண்பர்களான சுகுமார், தமிழரசன், கண்ணன் ஆகிய 3 பேர் இருந்தனர். இதனால் அஞ்சி நடுங்கிய இளம்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் கொடியரசனும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பிடித்துக் கொண்டு அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த பெண் தப்பிஓட முயன்ற போது இங்கிருந்து ஓட முயன்றால் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுத்த 5 பேரும் இளம்பெண்ணை கற்பழித்தனர். பின்னர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடினர்.

இதையடுத்து முந்திரி தோப்பில் இருந்து நடந்தே வீட்டுக்கு வந்த இளம்பெண் இதுபற்றி தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா விசாரணை நடத்தினார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டதாக கொடியரசன், கண்ணன், சாமிநாதன், சுகுமாரன், தமிழரசன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.