போஸ்டர் செய்தி

தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை புதிய சாதனைகள், வரலாறுகளை படைக்கும்

சென்னை, செப். 11–

முதலமைச்சர் வெளியிட்ட தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை புதிய சாதனை வரலாறுகளை படைக்க வழி வகுக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம் மற்றும் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை – 2018 வெளியீட்டு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

அம்மா, அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களையும், தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையோடு வழங்கினார்.

வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு என்னும் லட்சியப் பாதையில் ஒவ்வொரு துறைக்கும் செயல்திட்டங்களை வகுத்து அம்மா, முனைப்புடன் செயல்படுத்தினார்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிடத் தேவையான திறன்பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்குவதிலும் அம்மா பல புதுமைத்திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக இன்று நமது மாநிலம் பிற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அம்மா வகுத்துத் தந்த வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு இளைஞர்களின் அரசாகவே இன்று திகழ்ந்து வருகிறது.

ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு வேளாண்மை, தொழில் மற்றும் கல்வி ஆகியவை இன்றியமையாதவை ஆகும். அரசின் பல சீரிய திட்டங்களின் மூலமாக வேளாண்மையில் அதிக அளவு உற்பத்தி சாதனை நிகழ்த்தியதோடு தொழில் துறையிலும் முன்னேற்றம் நாம் அடைந்துள்ளோம்.

உயர் கல்விக்கு முன்னுரிமை

அதேபோல உயர்கல்வித்துறைக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட்டு, எதிர் கால வரலாறு என்றென்றும் புகழ்ந்துரைக்கும் வகையில், கடந்த 7 ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 44 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள், தேசிய சட்டப் பள்ளி மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம் என புதிய கல்வி நிறுவனங்கள், தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டை ஊக்குவித்து, தரம் வாய்ந்த உயர்கல்வி மாணாக்கர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி தொழில்நுட்பக் கல்வியில் உன்னத நிலையை அடைகின்ற அதே நேரத்தில், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வாழ்க்கைத் தட்டின் சமநிலையைப் பராமரித்திட வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு வெற்றி கண்டு வருகிறது.

உயர்கல்வி கற்ற மாணவர் அல்லது மாணவி ஒருவர் வேலைவாய்ப்பு பெறுவது எனில்,
* ஏற்கெனவே உள்ள குழுமங்களில் வேலைவாய்ப்பை கேட்டுப் பெறுவது,
* வேலைவாய்ப்புகளை தாங்களே உருவாக்கிக் கொள்வது,
* ஒரு தொழில் தொடங்கி தன்னையொத்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பது என மூன்று வகைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கிப் கொள்ள முடியும்.
இந்த மூன்று வகைகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்கிப் பெருக்கிட அம்மாவின் அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களையும் மாணவர்களையும் இணைக்கும் பல்கலைக்கழகம் – தொழில் நிறுவனங்கள் கூட்டிணைவு மையங்கள் அமைக்கப்பட்டன.

அவர்கள் எளிதாக வேலை வாய்ப்பினைப் பெற்றிடும் வகையில், ஆளுமைத்திறன், பேச்சுத்திறன், குழுப்பணித்திறன் போன்ற மென்திறன்களை மாணவர்களுக்கு கற்பிக்க 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கல்லூரிகளில் மென்திறன் மையங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக, இன்று தொழில் துறை மற்றும் உயர்கல்வித் துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ள, தொழில் நிறுவனங்களும் உயர் கல்விக் கல்லூரிகளும் பங்கேற்கும் இந்த கலந்தாய்வுக் கூட்டம் – ஒருங்கிணைந்த உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் அரசின் குறிப்பிடத்ததக்க ஒரு முன் முயற்சியாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகளின் பிரதிநிதிகளையும், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

வளர்ச்சி திட்டங்கள்

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமச் சீரான வளர்ச்சி ஏற்படும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை அம்மாவின் அரசு செயலாற்றி வருகின்றது.

இதனை சிறப்புடன் எடுத்துக்காட்டும் வகையில் இன்று இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இணைந்து பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும், அதே நேரத்தில் அவர்கள் சுயதொழில் துவங்குவதற்கு ஏதுவாக தொழிலகங்கள் உப உற்பத்தி வாய்ப்பு பெற உரிய வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும் என இத்தருணத்தில் அனைவரையும் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இனிய நிகழ்ச்சியில் கூடுதல் சிறப்பாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை – 2018 வெளியிடப்பட்டிருக்கிறது.
அம்மாவின் தொலைநோக்குப் பார்வையுடன் நமக்களித்த அறிவுரை களின்படியும், ஆலோசனைப்படியும் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை – 2018 தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

புதிய சாதனைகள்

இதனை தயாரித்து வழங்கியுள்ள தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம் மணிகண்ட னுக்கும், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபுவுக்கும், உறுதுணையாக இருந்த தகவல் தொழில்நுட்பவியல் துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரால் இன்று வெளியிடப்படும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை – 2018, தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் மேலும் பல புதிய சாதனைகள் மற்றும் வரலாறுகளை படைக்க வழிவகுக்கும்.

அம்மா வழியில் தமிழ்நாடு கண்டு வரும் வளர்ச்சியை மேலும் உத்வேகப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒருங்கிணைந்து உயர் கல்வி மாணவச் செல்வங்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்து அமைகிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *