சென்னை, பிப். 14–
குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டிருந்த நிலையில், டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் இன்று காலை 11.30 மணிக்கு வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது, புகழ்பெற்ற செய்தி நிறுவனமான பிபிசி. 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளுக்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த மோடியின் பங்கு குறித்து, பிபிசி அண்மையில் 2 பாகங்களாக ஆவணப்படம் வெளியிட்டு இருந்தது. ஆவணப் படத்தின் முதல் பாகத்தை பிபிசி வெளியிட்ட உடனே, பாரதீய ஜனதா அரசு இந்தியாவில் தடைசெய்தது.
வருமான வரி சோதனை
ஆனால், தடை செய்யப்பட்ட 2 நாட்களில் மீண்டும் 2 வது பாகத்தை பிபிசி வெளியிட்டு அதிரடி காட்டியது. இதனைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியினர் பிபிசிக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். ஆனால், காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட இடங்களில் பிபிசி ஆவணப்படத்தை மொழிபெயர்த்து, இந்தியாவில் வெளியிட்டனர். மேலும் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு வந்த போது, பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசிக்கு சொந்தமான செய்தி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அலுவலங்களில், இந்திய ஒன்றிய அரசு வருமான வரி சோதனையை மேற்கொண்டுள்ளது. பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் உள்ளே நுழைந்த உடன், பணியாளர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.